Column Left

Vettri

Breaking News

கட்டுமானப் பொருட்கள் மற்றும் மரக்கிளைகளை அகற்றி ஒத்துழைக்குமாறு தவிசாளர் வேண்டுகோள்




 கட்டுமானப் பொருட்கள் மற்றும் மரக்கிளைகளை அகற்றி ஒத்துழைக்குமாறு தவிசாளர் வேண்டுகோள்


பாறுக் ஷிஹான்

வீதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், சீரான பொதுப் போக்குவரத்திற்கு வழிவகுக்கவும் நிந்தவூர் பிரதேச சபையின் அதிகார எல்லைக்குட்பட்ட பொதுமக்களுக்குச் சபை நிர்வாகத்தினால் விசேட விழிப்புணர்வும் அறிவுறுத்தல்களும் விடுக்கப்பட்டுள்ளன.


நிந்தவூர் பிரதேச சபையின் எல்லைக்குள் அமைந்துள்ள பிரதான மற்றும் உட்புற வீதிகளில் பொதுப் போக்குவரத்திற்கும் பொதுமக்களின் நடமாட்டத்திற்கும் இடையூறாக அமைந்துள்ள மரக்கிளைகள், புதர்கள், பூச்செடிகள், சட்டவிரோதப் படிக்கட்டுகள் மற்றும் ஏனைய தடைகளை உடனடியாக அகற்றுவது தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன், வீதியோரங்களில் நீண்டகாலமாகக் குவித்து வைக்கப்பட்டுள்ள கற்கள், மணல், மண் மற்றும் ஏனைய கட்டுமானப் பொருட்களை உடனடியாக அகற்றி, வீதிகளைப் பொதுமக்கள் தடையின்றிப் பயன்படுத்துவதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு சபை கேட்டுக்கொண்டுள்ளது.

பாதசாரிகள், பாடசாலை மாணவர்கள், முதியவர்கள் மற்றும் வாகனப் பயணிகளின் பாதுகாப்பையும், விபத்துகளற்ற சீரான போக்குவரத்தையும் உறுதிப்படுத்தும் நோக்கிலேயே இத்தீர்மானமும் விழிப்புணர்வு நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

எனவே, நிந்தவூர் பிரதேச சபையின் அதிகார எல்லைக்குட்பட்ட அனைத்துப் பொதுமக்களும் இவ்விடயத்தில் பொறுப்புணர்வுடன் செயற்பட்டு, பொதுவீதிகளைத் தடையற்றதாகவும் பாதுகாப்பானதாகவும் பேணுவதற்குப் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments

Subscribe Us