மக்களின் உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாப்பதற்காக காரைதீவு பிரதேச சபை தொடர்ச்சியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுக்கும் : தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன்
மக்களின் உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாப்பதற்காக காரைதீவு பிரதேச சபை தொடர்ச்சியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுக்கும் : தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன்
நூருல் ஹுதா உமர்
நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலை மாற்றம் காரணமாக பல்வேறு பிரதேசங்களிலும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு அபாயங்கள் அதிகரித்து வருகின்றன. இதனைக் கருத்திற்கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காரைதீவு பிரதேச சபையினால் விசேட சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
காரைதீவு பிரதேச சபைக்குச் சொந்தமான இடங்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புடன் தொடர்புடைய பகுதிகளைத் துப்புரவு செய்து, மழைநீர் தேங்கி நிற்பதையும் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளையும் குறைக்கும் நோக்கில் இப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன் தலைமையில், காரைதீவு பிரதேச அனர்த்த சிறப்பு படையணியினரின் பங்களிப்புடன் இச்சிரமதான நடவடிக்கைகள் இடம்பெற்றன.
இதன்போது கருத்துத் தெரிவித்த தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன்,
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தற்போது நிலவும் அசாதாரண காலநிலை மாற்றம் காரணமாக வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்கள் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுகின்றது. இவ்வாறான சூழ்நிலையில், அனர்த்தங்கள் ஏற்பட்ட பின்னர் அவற்றை எதிர்கொள்வதைவிட, அவை ஏற்படுவதற்கு முன்னரே தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகவும் அவசியமாகும்.
காரைதீவு பிரதேசத்தில் மழைநீர் தடையின்றி வழிந்தோடுவதற்கும், நீர் தேங்கக்கூடிய இடங்களை அடையாளம் கண்டு அவற்றைத் துப்புரவு செய்வதற்கும் பிரதேச சபை முன்னுரிமை வழங்கி வருகின்றது.
அந்த வகையில், பிரதேச சபைக்குச் சொந்தமான இடங்களைத் துப்புரவு செய்வதுடன், அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள காரைதீவு பிரதேச அனர்த்த சிறப்பு படையணியையும் களத்தில் ஈடுபடுத்தி வருகின்றோம்.
அனர்த்த முகாமைத்துவம் என்பது ஒரு நிறுவனத்தின் பொறுப்பு மாத்திரமல்ல. பொதுமக்களுக்கும் அதில் முக்கியமான பங்குண்டு. எனவே, பொதுமக்கள் தமது வீடுகள், காணிகள் மற்றும் சுற்றுப்புறங்களில் காணப்படும் வடிகான்கள், நீரோடைகள் ஆகியவற்றைத் துப்புரவாகப் பேணுவதுடன், பொலித்தீன் மற்றும் கழிவுப் பொருட்களை நீர்வழிப்பாதைகளில் வீசுவதைத் தவிர்க்க வேண்டும்.
பிரதேச மக்களின் உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாப்பதற்காக காரைதீவு பிரதேச சபை தொடர்ச்சியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுக்கும். எந்தவொரு அனர்த்த நிலையையும் எதிர்கொள்வதற்கு எமது பிரதேச சபை தயாராக இருக்க வேண்டும் என்பதே எமது நோக்கமாகும் எனத் தெரிவித்தார்.
காலநிலை மாற்றத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்து, மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் காரைதீவு பிரதேச சபையினால் இவ்வாறான சமூகப் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் துப்புரவுப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments