மாவடிப்பள்ளி மஜினாவுக்கு கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் 'இளங்கலைஞர்' அரச விருது!
மாவடிப்பள்ளி மஜினாவுக்கு கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் 'இளங்கலைஞர்' அரச விருது!
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் இலக்கியத் துறையில் திறம்படச் செயற்படும் கலைஞர்களின் படைப்புகளையும் சாதனைகளையும் புள்ளியியல் அடிப்படையில் துல்லியமாக மதிப்பிட்டு வழங்கப்படும் அரச விருதான "இளங்கலைஞர்" விருதுக்கு மாவடிப்பள்ளியைச் சேர்ந்த மஜினா தெரிவு செய்யப்பட்டு, 2026 ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண "இளங்கலைஞர் விருது" இலக்கியப் பிரிவில் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் 28ஆம் திகதி புதன்கிழமை மட்டக்களப்பு Golden River ஹோட்டலில் "கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் மாவடிப்பள்ளி மஜினாவுக்கு அரச விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
கிழக்கு மாகாண ஆளுநர் டாக்டர் ஜயந்த லால் ரத்னசேகர, கல்வி அமைச்சின் செயலாளர் என். மணிவண்ணன் மற்றும் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் ஏ.எல். தௌபீக் மற்றும் மாகாண, மாவட்ட, பிரதேச கலாசார உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகளின் முன்னிலையில் இவ்விருது வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இவர், இந்தியாவின் 'மணி மகுடம்' சஞ்சிகையின் இணையாசிரியராகவும், 'துணிந்தெழு' சஞ்சிகையின் ஆசிரியர் குழு உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார்.
கவிதை, சிறுகதை, சிறுவர் இலக்கியம், கட்டுரை, பெண் ஆளுமை நேர்காணல்கள் என இலக்கியத்தின் ஊடாக சமூக அக்கறை, தன்னம்பிக்கை, பெண்களின் முன்னேற்றம், நல்லிணக்கம் மற்றும் மனிதநேயச் சிந்தனைகளை வெளிப்படுத்தி வரும் இவர், முன்னணி நாளிதழான 'தினகரன்' பத்திரிகையின் 'செந்தூரம்' பக்கத்தின் வாயிலாக இதுவரை 59-க்கும் மேற்பட்ட சர்வதேசப் பெண் ஆளுமைகளின் நேர்காணல்களை வெளியிட்டுள்ளார்.
இவரது ஆற்றல் மற்றும் திறமைக்கு சான்றாக பல விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளன. கலாசார அலுவல்கள் திணைக்களம் வழங்கிய "கலைஞர் சுவதம் விருது"
சிரச TV, News 1st மற்றும் NDB வங்கி இணைந்து நடாத்திய 'வனிதாபிமான' போட்டியில் மாகாண ரீதியில் முதலிடம் பெற்று சிரச கலையகத்தில் கௌரவிப்பு
துணிந்தெழு சஞ்சிகை மற்றும் ஸ்கை தமிழ் ஊடகத்தின் விருது விழாவில் "சிறந்த கட்டுரை எழுத்தாளருக்கான விருது"
துணிந்தெழு சஞ்சிகையின் "சிறந்த இணையாசிரியர் விருது"
Mutur JMI Expo 2026 நிகழ்வில் வழங்கப்பட்ட "Young Writer Excellency Award"
இந்தியாவில் வழங்கப்பட்ட "வெற்றித் தமிழினி விருது "
இந்தியாவின் மணிமகுட சஞ்சிகையின் "சிறந்த இணையாசிரியர் விருது" உட்பட பல சர்வதேச மற்றும் தேசிய விருதுகளைப் பெற்றுள்ள இவர், தேசிய இலக்கிய விழாக்களிலும் தொடர்ச்சியாகப் பங்கேற்று பிரதேச, மாவட்ட மட்டங்களில் பல முதலிடங்களை வென்று சான்றிதழ்கள், நினைவுச் சின்னங்களைப் பெற்றுள்ளார்.
மிக இளம் வயதிலேயே துடிப்புடன் இலக்கியத்துறையில் இவர் ஆற்றிவரும் சிறந்த பங்களிப்புகளுக்காக அரசினால் வழங்கப்பட்ட 'இளங்கலைஞர்' விருதானது, அரச மட்டத்தில் கிடைத்த உயரிய அங்கீகாரமாகும். இவ்விருதானது மாவடிப்பள்ளி பிரதேசத்திற்கும் அம்பாறை மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இவ்விருது மிக இளம் வயதிலேயே கிடைத்திருப்பதையொட்டி கலை உலகத்தினர் தமது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

No comments