காரைதீவில் பாடசாலைகளுக்கிடையிலான வினா–விடைப் போட்டி : சண்முகா முதலிடம்
வினா–விடைப் போட்டி : சண்முகா முதலிடம்
நூருல் ஹுதா உமர்
தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு காரைதீவு பிரதேச சபையின் பொது நூலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான வினா–விடைப் போட்டி இன்று நூலக கேட்போர் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது.
காரைதீவு பொது நூலகர் ஏ.பி.எம். சர்ஜுன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் சுப்பிரமணியம் பாஸ்கரன் பிரதம அதிதியாகவும், பிரதேச சபைச் செயலாளர் வனிதா டேவிட் அமிர்தலிங்கம் கௌரவ அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர்.
இப்போட்டியில் ஐந்து பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தமது அறிவாற்றலையும் திறமைகளையும் வெளிப்படுத்தினர்.
போட்டியின் இறுதிப் புள்ளிகளின் அடிப்படையில், சண்முகா மகா வித்தியாலயம் 138 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றுக்கொண்டது. ஏனைய பாடசாலைகளான காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரி 80 புள்ளிகளை பெற்று இரண்டாமிடத்தையும், மாவடிப்பள்ளி அல் அஸ்ரப் மகா வித்தியாலயம் 78 புள்ளிகளை பெற்று மூன்றாம் இடத்தையும், முதல் மூன்று சுற்றுக்களிலும் முதலிடத்தை தக்கவைத்திருந்த இராமகிருஷ்ண மிஷன் பெண்கள் பாடசாலை இறுதி சுற்றில் புள்ளிகளை தவறவிட்டமையால் 73 புள்ளிகளை பெற்று நான்காம் இடத்துக்கு தள்ளப்பட்டது, மாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலயம் 65 புள்ளிகளை பெற்றுக்கொண்டதுடன் இறுதி இடத்தை பெற்றது.
இந்நிகழ்வில் பிரதேச சபையின் நிதி உதவியாளர், சனசமூக உத்தியோகத்தர், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள், உதவி நூலகர்கள், நூலக உதவியாளர்கள் மற்றும் பங்கேற்ற பாடசாலைகளின் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
மாணவர்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவித்தல், பொது அறிவை விருத்தி செய்தல், அறிவுசார் போட்டிகள் ஊடாக மாணவர்களின் ஆளுமை மற்றும் சிந்தனைத் திறன்களை மேம்படுத்துதல் ஆகிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

No comments