மட்டு, போதனா வைத்தியசாலையின் முன்னாள் பணிப்பாளருக்கு முன்னாள் சுகாதார அமைச்சர் நன்றி தெரிவிப்பு..!*
*மட்டு, போதனா வைத்தியசாலையின் முன்னாள் பணிப்பாளருக்கு முன்னாள் சுகாதார அமைச்சர் நன்றி தெரிவிப்பு..!*
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராகப் பணியாற்றிய டொக்டர் கே.முரளீஸ்வரன், தனது குறுகிய காலப் பணியில் கிழக்கு மாகாண மக்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ளதாகவும், அவரது அர்ப்பணிப்புமிக்க உழைப்புக்கு தனது இதயபூர்வமான நன்றியைத் தெரிவிப்பதாகவும் கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபையிர் குறிப்பிட்டுள்ளார்.
டொக்டர் முரளீஸ்வரன் அவர்களின் திறமையான நிர்வாகம் குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
"கடந்த மூன்று மாத காலப் பகுதியில் அவர் வைத்தியசாலையின் நிர்வாகத்தை மிகவும் வினைத்திறனுடன் கையாண்டார். நான் இரு முறை அங்கு தங்கி சிகிச்சை பெற்றபோது பல நேர்மறையான மாற்றங்களைக் காண முடிந்தது. வைத்தியசாலை சேவைகள் மிகவும் திருப்திகரமானதாக இருந்தது. குறிப்பாக வைத்தியசாலை சூழல், விடுதிகள் மற்றும் கழிவறைகள் மிகத் தூய்மையாகப் பராமரிக்கப்பட்டதுடன், நோயாளர்களுக்கு வழங்கப்பட்ட உணவும் தரமானதாக இருந்தது.
அபிவிருத்திப் பணிகளுடன் நின்றுவிடாமல், நோயாளர்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளித்து, விரைவான மற்றும் அன்பான மருத்துவச் சேவையை அவர் வழங்கினார். பொதுமக்களும் அவரது சேவையைப் பாராட்டிப் பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது. பதவியை விடப் பணிக்கே முக்கியத்துவம் கொடுத்து, மனிதநேயத்துடன் சேவையாற்றிய அவரது பணிகள் என்றும் நினைவுகூரப்பட வேண்டியவை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், டொக்டர் முரளீஸ்வரன் விட்டுச் சென்ற இடத்திலிருந்து, புதிய பணிப்பாளர் மேலும் சிறந்த சேவைகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் சுபையிர் தனது குறிப்பிட்டுள்ளார்.

No comments