Column Left

Vettri

Breaking News

சட்டவிரோதக் கரையோரக் கட்டுமானங்களை அகற்றும் நடவடிக்கைக்கு ஆதரவாக மீனவர்கள் ஆர்ப்பாட்ட ஊர்வலம்!




 சட்டவிரோதக் கரையோரக் கட்டுமானங்களை அகற்றும் நடவடிக்கைக்கு ஆதரவாக மீனவர்கள் ஆர்ப்பாட்ட ஊர்வலம்!


ஜனாதிபதி அநுரகுமாரவின் திட்டங்களை நிறைவேற்ற முழு ஆதரவு தெரிவித்து கோஷம்


நூருல் ஹுதா உமர்



சாய்ந்தமருது, கல்முனை கடற்கரைப் பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோதக் கட்டுமானங்களை அகற்றுவதற்கு ஆதரவு தெரிவித்து, மீனவர்கள் சுலோக அட்டைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி ஊர்வலத்தில் ஈடுபட்டனர்.




கடற்கரைப் பிரதேசங்களில் உள்ள சட்டவிரோதக் கட்டுமானங்களை அகற்றும் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்த மீனவர்கள், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் திட்டங்கள் நிறைவேற்றப்படுவதற்கு தமது முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் தெரிவித்தனர்.


இதன்போது, “கடற்கரைப் பிரதேசத்தில் உள்ள சட்டவிரோதக் கட்டுமானங்களை அகற்றும் திட்டத்திற்கு எமது ஆதரவு”, “ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் திட்டங்கள் நிறைவேற எங்களின் முழு ஆதரவு”, “சட்டவிரோதக் கட்டுமானங்களை அகற்றும் திட்டத்தை நிறுத்தக் கூடாது” போன்ற வாசகங்கள் அடங்கிய சுலோகங்களை ஏந்தியவாறு ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் கோஷங்களை எழுப்பினர்.


இதற்கிடையில், கல்முனை மற்றும் சாய்ந்தமருது கரையோரப் பாதுகாப்பு வலயத்தில் உரிய அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள கட்டுமானங்களை அகற்றுமாறு கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர மூலவளங்கள் முகாமைத்துவத் திணைக்களம் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.


இதற்கமைய, கரையோர வலயத்திற்குள் உரிய அனுமதியின்றி நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகள், குடிசைகள், கொட்டகைகள் மற்றும் தற்காலிக மீன்பிடி வாடிகள் உள்ளிட்ட கட்டுமானங்களை ஏழு நாட்களுக்குள் இடித்து அகற்றுமாறு உத்தியோகபூர்வ கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.


குறித்த உடைத்தகற்றல் கட்டளை அறிவித்தல் ஒட்டப்பட்ட திகதியிலிருந்து ஏழு நாட்களுக்குள் கட்டுமானங்களை அகற்ற வேண்டுமெனவும், அந்தக் கட்டளைக்கு எதிராக மூன்று நாட்களுக்குள் மேன்முறையீடு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


1981 ஆம் ஆண்டின் 57 ஆம் இலக்க கரையோரப் பாதுகாப்புச் சட்டத்தின் பிரகாரம், கரையோர வலயத்திற்குள் எந்தவொரு அபிவிருத்தி அல்லது கட்டுமான நடவடிக்கையையும் மேற்கொள்வதற்கு கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் முன் அனுமதி பெறுவது கட்டாயமாகும்.


அனுமதியற்ற கட்டுமானங்கள் கடலரிப்பை அதிகரிப்பதுடன், கரையோரப் பாதுகாப்புத் திட்டங்களை முன்னெடுப்பதற்கும் தடையாக அமையக்கூடும் எனச் சுட்டிக்காட்டப்படுகிறது.


இதேவேளை, கல்முனை, சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு பிரதேசங்களைச் சேர்ந்த மீனவர்களின் தற்காலிக மீன்பிடி வாடிகளுக்கும் அகற்றல் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பில் மீன்பிடி வாடி உரிமையாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கு இடையில் விசேட கலந்துரையாடல்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


மறுபுறம், இப்பிராந்தியத்தில் கடலரிப்பைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சாய்ந்தமருது முதல் மாளிகைக்காடு வரையிலான கரையோரப் பகுதியில் அலைதாங்கிகள் (Groyne Field) அமைக்கும் பணிகளையும் கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் முன்னெடுத்து வருகின்றது.


இந்நிலையில், கரையோரச் சூழல் பாதுகாப்பு, சட்டவிரோதக் கட்டுமானங்களை அகற்றுதல் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்தல் ஆகிய மூன்று விடயங்களையும் சமநிலைப்படுத்தி இந்நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமெனப் பிரதேச மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகின்றது.

No comments

Subscribe Us