அல் அஷ்ரக் தேசிய பாடசாலையில் ‘ASHRAQIAN EXPO’ ஆக்கத்திறன் கண்காட்சி கோலாகலமாக ஆரம்பம்!
அல் அஷ்ரக் தேசிய பாடசாலையில் ‘ASHRAQIAN EXPO’ ஆக்கத்திறன் கண்காட்சி கோலாகலமாக ஆரம்பம்!
நூருல் ஹுதா உமர்
அம்பாறை மாவட்டம், நிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலையின் மாணவர்களின் படைப்பாற்றல், புத்தாக்கச் சிந்தனை மற்றும் ஆக்கத்திறன்களை வெளிக்கொணரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘ASHRAQIAN EXPO’ கண்காட்சி கோலாகலமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பாடசாலை அதிபர் ஏ. அப்துல் கபூர் தலைமையில் நடைபெற்ற இக்கண்காட்சியில், தரம் 6 முதல் தரம் 13 வரையான மாணவர்களின் பல்வேறு துறைசார்ந்த ஆக்கப்பூர்வமான படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் சட்டத்தரணி ஏ.எல்.எம். ரியாஸ் ஆதம் கலந்து சிறப்பித்ததுடன், கௌரவ அதிதியாக நிந்தவூர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.எல்.எம். முத்தாரிஸ் பங்கேற்றார்.
மேலும், பாடசாலையின் முன்னாள் அதிபர்களான அல்-ஹாஜ் எம்.எம். ரஹீம், அல்-ஹாஜ் எம்.எம். அப்துல் அஸீஸ், அல்-ஹாஜ் எஸ்.ஏ.எஸ்.எம். சம்சுதீன் மௌலானா ஆகியோர் விசேட அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
இதன்போது, பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவின் செயலாளர் டாக்டர் ஐ.எல்.எம். ஸாஹிர் மற்றும் குழு உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் பொறியியலாளர் ஏ.எம். ஆஷிக், உப செயலாளர் எம்.ஆர்.எம். சிபான் றஸீக் மற்றும் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா உத்தியோகத்தர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
மாணவர்களின் பாடசாலைக் கல்விக்கு அப்பாற்பட்ட திறமைகள், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அறிவு, கலைத்திறன், புத்தாக்கச் சிந்தனை உள்ளிட்ட பல்வேறு ஆற்றல்களை வெளிப்படுத்தும் தளமாக இக்கண்காட்சி அமைந்துள்ளது.
குறிப்பாக, மாணவர்களின் சுயமாகச் சிந்திக்கும் திறன், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் ஆர்வம் மற்றும் நடைமுறை அறிவை வளர்ப்பதற்கு இத்தகைய கண்காட்சிகள் முக்கிய பங்களிப்புச் செய்கின்றன.
‘ASHRAQIAN EXPO’ கண்காட்சி நவம்பர் 05, 06 மற்றும் 07 ஆம் திகதிகளில் தொடர்ந்து நடைபெறவுள்ளதுடன், மாணவர்களின் ஆக்கங்களைப் பார்வையிடுவதற்குப் பொதுமக்கள், பெற்றோர்கள் மற்றும் கல்விச் சமூகத்தினருக்கு பாடசாலை நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

No comments