வரி இல்லாத பெட்ரோல் ஒரு லிட்டர் 280 ரூபாய்: சம்பிக்க வெளியிட்ட அறிக்கை
கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து உள்நாட்டில் சுத்திகரித்து பெறப்படும் டீசல் மற்றும் பெட்ரோல் ஆகியவற்றின் விலைகளை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நிர்ணயிக்கும் சூத்திரமும் அடிப்படையும் உடனடியாக நாட்டுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச 'சிங்கப்பூர் பிளாட்ஸ்' விலைக் குறியீடுகளின் அடிப்படையில், அவர் தனது சமூக ஊடகக் கணக்கில் பதிவிட்ட ஒரு பதிவில் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் வழங்கிய தரவுகளின்படி, ஒக்டோபர் 30 ஆம் திகதி நிலவரப்படி சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் பின்வருமாறு இருந்ததாக கூறியுள்ளார்.
ஒரு பீப்பாய் டீசலின் விலை: 162 அமெரிக்க டொலர். அதன்படி, ஒரு லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட டீசலின் ஏற்றுதல் விலை ரூ.336 ஆகும்.
ஒரு பீப்பாய் 92 ஒக்டேன் பெட்ரோலின் விலை: 138 அமெரிக்க டொலர். அதன்படி, ஒரு லீட்டர் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலின் ஏற்றுதல் விலை ரூ.280 ஆகும்.
ஒரு பீப்பாய் ப்ரென்ட் கச்சா எண்ணெயின் விலை: 114 அமெரிக்க டொலர்.
இந்த விலைக் குறியீடுகளின்படி, சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தில் உற்பத்தி செய்யப்பட்டு நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் டீசல் மற்றும் பெட்ரோலுக்கான கச்சா எண்ணெயின் விலை ஒரு லிட்டருக்கு ரூ. 236 ஆக உள்ளது என்று கூறிய சம்பிக்க ரணவக்க, இத்தகைய சூழலில் உள்ளூர் சந்தையில் சில்லறை விலைகள் எப்படி இவ்வளவு உயர்வாக நிர்ணயிக்கப்பட்டன என்றும் கேள்வி எழுப்பினார்.
எனவே, இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெயைப் பயன்படுத்தி உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் எரிபொருளின் உண்மையான உற்பத்திச் செலவு, வரிகள் மற்றும் விநியோகச் செலவுகள் எவ்வாறு கணக்கிடப்பட்டன என்பது குறித்து தற்போதைய அரசாங்கம் பொதுமக்களுக்குத் தெளிவான அறிக்கை வெளியிட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

No comments