மத்திய குற்றப் புலனாய்வு அதிகாரிகளிடம் சிக்கிய 21 வெளிநாட்டவர்கள்!
மருதானைப் பகுதியில் 21 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் (CCIB) இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
செல்லுபடியாகும் விசாக்கள் இன்றித் தங்கியிருந்தமை மற்றும் இணையவழி அடிப்படையிலான நிதி மோசடிகளில் ஈடுபட்டிருந்தமை தொடர்பான சந்தேகத்தின் பேரிலேயே இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மருதானை காவல் பிரிவிற்குட்பட்ட டெக்னிக்கல் சந்தி (Technical Junction) பகுதியில் அமைந்துள்ள மூன்று மாடி கட்டடம் ஒன்றில் நேற்று (02-11-2026) இரவு விசேட சோதனை நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது
.இதன்போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் இரு பெண்கள் அடங்கலாக 12 சீன நாட்டவர்கள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இவர்களுடன் ஆறு வங்காளதேச நாட்டவர்களும் மற்றும் மூன்று இந்திய நாட்டவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் (CCIB), குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) மற்றும் குடிவரவு குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் இணைந்து நடத்திய கூட்டுச் சோதனையிலேயே இக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட 21 சந்தேகநபர்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இன்று (03-11-2026) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments