Column Left

Vettri

Breaking News

சாய்ந்தமருது மல்ஹருஸ் ஷம்ஸ் மகா வித்தியாலயத்தில் புதிய இருமாடித் தொழில்நுட்பக் கட்டடம் திறந்து வைப்பு




 சாய்ந்தமருது மல்ஹருஸ் ஷம்ஸ் மகா வித்தியாலயத்தில் புதிய இருமாடித் தொழில்நுட்பக் கட்டடம் திறந்து வைப்பு : கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர பிரதம அதிதியாகப் பங்கேற்பு


நூருல் ஹுதா உமர்


அம்பாறை மாவட்டம், கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட சாய்ந்தமருது மல்ஹருஸ் ஷம்ஸ் மகா வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஆலோசனைப் பிரிவுடன் கூடிய இருமாடித் தொழில்நுட்பக் கட்டடத்தின் திறப்பு விழா இன்று (29) வியாழக்கிழமை பாடசாலை வளாகத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

பாடசாலையின் அதிபர் திருமதி நஸ்லின் றிப்கா அன்சார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு புதிய கட்டடத்தை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.


சாய்ந்தமருது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவரும், அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினருமான பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா கௌரவ அதிதியாகக் கலந்துகொண்டார். மேலும், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹுதுல் நஜீம் உள்ளிட்ட கல்வித்துறை சார்ந்த முக்கியஸ்தர்கள் விசேட அதிதிகளாகப் பங்கேற்றனர்.


கல்முனை கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், ஏனைய பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


பாடசாலையின் கல்வி உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதையும், மாணவர்களுக்குச் சிறந்த கற்றல் சூழலை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ள இக்கட்டடம், பாடசாலையின் வளர்ச்சிப் பயணத்தில் முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. புதிய தொழில்நுட்பக் கட்டடம் திறந்து வைக்கப்பட்டுள்ளதன் மூலம் மாணவர்களுக்கான கற்றல் வசதிகளை மேலும் மேம்படுத்துவதுடன், தொழில்நுட்பக் கல்வி உள்ளிட்ட கல்விசார் நடவடிக்கைகளை வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்கும் வாய்ப்புகள் ஏற்படுகின்றன.


குறிப்பாக, மாணவிகளின் கல்வி முன்னேற்றத்துக்கு உகந்த உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதுடன், நவீன கல்வித் தேவைகளுக்கு ஏற்ப பாடசாலையின் கற்றல் சூழலை மேம்படுத்துவதிலும் இக்கட்டடம் பங்களிப்புச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய கட்டடத்தின் திறப்பு விழாவில் பாடசாலைச் சமூகத்தினர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் பிரதேச முக்கியஸ்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


பாடசாலையின் எதிர்கால வளர்ச்சியையும் மாணவர்களின் கல்விச் சாதனைகளையும் மேம்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இத்திறப்பு விழா, பாடசாலைச் சமூகத்தினரிடையே மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் ஏற்படுத்திய நிகழ்வாக அமைந்தது.

No comments

Subscribe Us