Column Left

Vettri

Breaking News

அடுத்த வாரம் முதல் திடீர்ச் சுகாதாரப் பரிசோதனைகள்; விதிமீறின் கடும் சட்ட நடவடிக்கை!!!




(பாறுக் ஷிஹான்) சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் அம்பாறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை அதிகாரிகளும் இணைந்து, உணவுப் பாதுகாப்பு மற்றும் உணவுப் பொருட்களின் பொதியிடல், பெயரிடல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர். இந்நிகழ்வின் போது அனைத்து உணவுக் கையாளும் நிலைய உரிமையாளர்களுக்கும் கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. உணவு வியாபாரிகளுக்கான கட்டாய வழிகாட்டல்களாக உணவைக் கையாளும் போது பணியாளர்கள் அனைவரும் பொருத்தமான பொலித்தீன் கையுறைகளை அணிய வேண்டும்,சமையல் மற்றும் உணவு பரிமாறும் பணியாளர்கள் முன்னங்கி (Apron) மற்றும் தலைக்கவச வலை (Hair Net) அணிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்,சமையலறை மற்றும் உணவு தயாரிக்கும் பிராந்தியங்களை எப்போதும் தூய்மையாகவும் சுகாதாரமான முறையிலும் பேண வேண்டும்,வியாபார நிலையங்களில் பணிபுரியும் அனைவரும் செல்லுபடியாகும் மருத்துவச் சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. எதிர்வரும் வாரம் முதல் சம்மாந்துறைப் பிரதேசத்திலுள்ள அனைத்து உணவுக் கையாளும் நிலையங்களிலும் சுகாதாரப் பரிசோதனைகள் தீவிரமாக முன்னெடுக்கப்படவுள்ளன. மேற்குறிப்பிடப்பட்ட சுகாதார விதிகள் மீறப்படுவதோ அல்லது குறைபாடுகள் கண்டறியப்படுவதோ அவதானிக்கப்பட்டால், எந்தவிதச் சலுகையும் அல்லது மன்னிப்பும் வழங்கப்படாமல் உடனடியாகச் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்குப் பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான உணவை வழங்குவது ஒவ்வொரு உணவு வியாபாரியின் முதற்தரப் பொறுப்பாகும் எனச் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.

No comments

Subscribe Us