Column Left

Vettri

Breaking News

நுயைச்சோலை அனல் மின் நிலையத்தின் பிரதான மூன்று இயந்திரங்களும் செயலிழப்பு!!!




(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்) நாட்டின் பிரதான மின் உற்பத்திக் கேந்திர நிலையமான நுரைச்சோலை லக்விஜய அனல்மின் நிலையம், எதிர்பாராத விதமாக முழுமையாகத் தனது இயக்கத்தை நிறுத்தியுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேசிய மின்கட்டமைப்பிற்கு அதிக பங்களிப்பை வழங்கும் இந்த மின் உற்பத்தி நிலையத்தின் மூன்று பிரதான மின் உற்பத்தி இயந்திரங்களும் சனிக்கிழமை (17) ஒரே கணத்தில் முற்றாகச் செயலிழந்துள்ளன. சனிக்கிழமை முற்பகல் 11:45 மணியளவில் தேசிய மின் கட்டமைப்புக்குள் திடீரெனப் ஏற்பட்ட ஒரு தொழில்நுட்பக் கோளாறே இந்தச் சங்கிலித் தொடர் முடக்கத்திற்குத் தொடக்கப் புள்ளியாக அமைந்துள்ளது. மின்கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையும் சமநிலையும் சிதைவடைந்த சில நிமிடங்களிலேயே, லக்விஜய அனல்மின் நிலையத்தில் நிறுவப்பட்டிருந்த 3 பாரிய மின் உற்பத்தி இயந்திரங்களும் தானாகவே இயக்கத்தை நிறுத்திக்கொண்டன. இந்தத் திடீர் செயலிழப்பானது தேசிய மின்கட்டமைப்பிற்குப் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் மொத்த மின் தேவையில் மிக முக்கியமான சுமார் 900 மெகாவாட் மின்சாரத்தை வழங்கி வந்த இந்த அனல்மின் நிலையம் ஒரேயடியாக ஸ்தம்பித்ததால், மின் சமநிலையைப் பேணுவதில் கடும் நெருக்கடி உருவாகியுள்ளது. தற்போது அனைவரது பார்வையும் இந்த இயந்திரங்கள் எப்போது மீண்டும் இயங்கும் என்பதிலேயே உள்ளது. இது குறித்து மின் நிலையப் பேச்சாளரிடம் வினவியபோது, முழுமையாகச் செயலிழந்துள்ள இந்த அனல்மின் உற்பத்தி இயந்திரங்களை மீள இயங்க வைக்கும் தொழில்நுட்பப் பணிகளை உடனடியாக ஆரம்பித்துள்ளதாகவும், எனினும் அவை வழமையான உற்பத்தி நிலைக்குத் திரும்புவதற்கு குறைந்தபட்சம் மூன்று நாட்களாவது எடுக்கும் எனவும் தெளிவுபடுத்தியுள்ளார். மூன்று நாட்களுக்கு இந்த 900 மெகாவாட் மின்சாரம் கிடைக்கப்பெறாத சூழலில், அதனை ஈடுசெய்ய மாற்று மின் உற்பத்திகள் எவ்வாறு முன்னெடுக்கப்படவுள்ளன என்பது குறித்தும், எதிர்வரும் நாட்களில் மின் விநியோகத்தில் தற்காலிகத் தடங்கல்கள் ஏற்படுமா என்பது தொடர்பிலும் இலங்கை மின்சார சபையின் அடுத்தகட்ட நகர்வுகள் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகின்றன.

No comments

Subscribe Us