நீர்ப்பாசனத் திணைக்கள அணியை வீழ்த்தி அரையிறுதிக்குத் தகுதிபெற்றது சம்மாந்துறை பிரதேச சபை அணி!
(தில்சாத் பர்வீஸ்)
கிழக்கு மாகாண அரச நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இடையில் நடைபெற்று வரும் 2026ஆம் ஆண்டுக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் காலிறுதிப் போட்டியில், சம்மாந்துறை நீர்ப்பாசனத் திணைக்கள அணியை வீழ்த்திய சம்மாந்துறை பிரதேச சபை அணி அரையிறுதிக்குத் தகுதிபெற்றுள்ளது.
சம்மாந்துறை அல்-அர்ஸத் மகா வித்தியாலய மைதானத்தில் இன்று (18) நடைபெற்ற இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய சம்மாந்துறை நீர்ப்பாசனத் திணைக்கள அணி ஐந்து ஓவர்களில் 62 ஓட்டங்களைப் பெற்றது.
இதற்குப் பதிலளித்துத் துடுப்பெடுத்தாடிய சம்மாந்துறை பிரதேச சபை அணி, 63 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை வெறும் 2.4 ஓவர்களில் எட்டியதுடன், 66 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியைப் பதிவு செய்தது.
அணியின் வெற்றிக்கு ஆசிக் மற்றும் ஏ.சி.எம். நயீம் ஆகியோரின் அதிரடியான துடுப்பாட்டம் முக்கிய பங்களிப்பை வழங்கியது. ஆசிக் ஐந்து சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரியுடன் ஓட்டங்களைக் குவித்ததுடன், நயீம் நான்கு சிக்ஸர்களைப் பெற்று அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.
இருவரினதும் அதிரடி ஆட்டத்தால், வெற்றி இலக்கை மிகக் குறைந்த ஓவர்களில் எட்டிய சம்மாந்துறை பிரதேச சபை அணி, போட்டியில் தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்தியது.
இதேவேளை, கிழக்கு மாகாண அரச நிறுவன ஊழியர்களுக்கு இடையில் நடைபெறும் இச்சுற்றுப்போட்டியில் பங்கேற்ற சம்மாந்துறைப் பிரதேசத்தைச் சேர்ந்த ஏனைய அரச நிறுவன அணிகள் அடுத்தடுத்த சுற்றுகளில் தோல்வியடைந்து வெளியேறியுள்ள நிலையில், சம்மாந்துறை பிரதேச சபை அணி தொடர்ந்து போட்டியில் நிலைத்து நிற்கும் ஒரே அணியாக அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.
காலிறுதியில் கிடைத்த இந்த வெற்றியைத் தொடர்ந்து, அரையிறுதிப் போட்டியிலும் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறுவதுடன், வெற்றிக் கிண்ணத்தையும் கைப்பற்றும் எதிர்பார்ப்புடன் சம்மாந்துறை பிரதேச சபை அணி அடுத்தகட்டப் போட்டிக்குத் தயாராகி வருகிறது.
No comments