கடந்த 24 வருடங்களில் செய்யப்படாத அபிவிருத்தியை இரண்டே ஆண்டுகளில் செய்துள்ளோம்- நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா
"கடந்த 24 வருடங்களில் செய்யப்படாத அபிவிருத்தியை இரண்டே ஆண்டுகளில் செய்துள்ளோம்- நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா
"எதிர்க்கட்சிகளால் மேடை போட்டு எங்களின் அபிவிருத்தியைக் கேள்விக கேட்க முடியாது; அநுரவின் ஆட்சி தொடரும் எனச் சவால்
பாறுக் ஷிஹான்
மக்களின் ஆதரவுடன் கட்டியெழுப்பப்பட்டுள்ள இந்த மக்கள் ஆட்சி இன்னும் பல ஆண்டுகளுக்குச் செவ்வனே தொடரும். நாட்டின் எதிர்வகாலம் தூய்மையான ஒரு தலைவரின் கீழ் பாதுகாப்பாக உள்ளது" எனதேசிய மக்கள் சக்தியின் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களின் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான ஏ. ஆதம்பாவா குறிப்பிட்டார்.
அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது முகத்துவார (Lagoon) அண்டிய பிரதேசத்தை நவீன முறையில் அபிவிருத்தி செய்யும் முகமாக, 10 மில்லியன் (ஒரு கோடி) ரூபா பெறுமதியான அபிவிருத்தித் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு சாய்ந்தமருதில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய தேசிய மக்கள் சக்தியின் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களின் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான ஏ. ஆதம்பாவா, கடந்த இரண்டு வருட கால அரசாட்சியின் சாதனைகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்துப் பல அதிரடியான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா தனது உரையில் குறிப்பிடுகையில்
"ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கு நாட்டு மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரம், இன்று நாடு ஒரு புரட்சிகரமான மாற்றத்தையும் புதிய அரசியல் கலாச்சாரத்தையும் நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறது. கடந்த கால ஆட்சிகளில் நாட்டின் சொத்துக்கள் சூறையாடப்பட்டு, பொருளாதாரம் அதளபாதாளத்திற்குத் தள்ளப்பட்டிருந்தது. ஆனால், தற்போதைய அரசாங்கம் ஊழல் மோசடிகளை முற்றிலுமாக ஒழித்து, மக்களின் வரிப்பதுகாப்பைப் பாதுகாத்து வருவதன் காரணமாகவே இன்று சர்வதேச நாடுகளும் உலக வங்கியும் இலங்கையின் துரித பொருளாதார வளர்ச்சியைப் பாராட்டி வருகின்றன.
"கடந்த 24 வருடங்களாக இந்தப் பிரதேசத்தில் எந்தவிதமான முறையான அபிவிருத்தியும் நடைபெறவில்லை. ஆனால், நாங்கள் ஆட்சிக்கு வந்து வெறும் இரண்டு வருடங்களுக்குள் சாய்ந்தமருது மண்ணில் எண்ணற்ற அபிவிருத்தித் திட்டங்களைச் செய்துள்ளோம். முடிந்தால் கடந்த காலத்தில் பதவியில் இருந்தவர்கள் தாங்கள் செய்த அபிவிருத்திகளை எங்களைப் போல் பட்டியலிட்டுக் காட்டட்டும்; அவர்களால் மேடை போட்டுப் பேசக்கூட முடியாது" என எதிர்க்கட்சியினருக்கு அவர் சவால் விடுத்தார்.
தற்போது முகத்துவாரப் பிரதேசத்தை நவீன முறையில் அழகுபடுத்தி உல்லாசப் பயணத் துறையை ஊக்குவிக்கும் வகையில் 1 கோடி ரூபா (10 மில்லியன்) செலவில் பூங்கா மற்றும் இளைப்பாறும் மையம் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.பிரஜா சக்தி நேர்மைத் திட்டத்தின் ஊடாக சாய்ந்தமருதில் பல வீட்டுத் திட்டங்கள் மற்றும் வாழ்வாதார உதவிகள் (தையல் இயந்திரங்கள், உபகரணங்கள்) வழங்கப்பட்டுள்ளன.கல்யாண வீதி உள்ளிட்ட பல பிரதான வீதிகள் காபட் வீதிகளாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
ஆயுர்வேத வைத்தியசாலையின் மேம்பாட்டுக்காக 20 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.எதிர்காலத்தில் மக்களுக்கு நிலம் மற்றும் வீடுகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் கரைவாகுபட்டுப் பிரதேசத்தில் சுமார் 150 ஏக்கர் காணியை வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நாங்கள் செய்யும் அபிவிருத்தித் திட்டங்களுக்குச் சில எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் சமூக வலைத்தளங்களில் போலியான உரிமை கொண்டாடுவதும், விளையாட்டுப் போட்டிகள் மற்றும் மாணவர் பரிசளிப்பு நிகழ்வுகளை வைத்து அரசியல் செய்வதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இது அவர்களின் வங்குரோத்து அரசியலையே காட்டுகிறது" என அவர் கடுமையாக விமர்சித்தார்."மக்களின் ஆதரவுடன் கட்டியெழுப்பப்பட்டுள்ள இந்த மக்கள் ஆட்சி இன்னும் பல ஆண்டுகளுக்குச் செவ்வனே தொடரும். நாட்டின் எதிர்வகாலம் தூய்மையான ஒரு தலைவரின் கீழ் பாதுகாப்பாக உள்ளது" எனத் தெரிவித்த அவர், பிரதேசத்தின் சுபீட்சத்திற்காகவும் மக்களின் மேம்பாட்டுக்காகவும் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுமாறு கேட்டுக்கொண்டார்.

No comments