Column Left

Vettri

Breaking News

காலநிலை மாற்ற அனர்த்தங்களுக்கு சபையை தயார் நிலையில் வைத்திருக்க காரைதீவு தவிசாளர் வலியுறுத்தல்!!!




(நூருல் ஹுதா உமர்) காரைதீவு பிரதேச சபையின் நான்காவது சபையின் 15ஆவது மாதாந்த சபைக் கூட்டம் இன்று (15) செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு காரைதீவு பிரதேச சபை சபா மண்டபத்தில் நடைபெற்றது. சபையின் தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் உப தவிசாளர், உறுப்பினர்கள் மற்றும் சபையின் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தின் ஆரம்பத்தில் கடந்த 14ஆவது அமர்வுக்கான கூட்டறிக்கை பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டதுடன், தவிசாளரின் அறிவிப்புகள் மற்றும் பல்வேறு பிரேரணைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டன. இதன்போது, எதிர்வரும் காலங்களில் ஏற்படக்கூடிய காலநிலை மாற்றம் மற்றும் அதன் காரணமாக உருவாகக்கூடிய அனர்த்த நிலைமைகளை கருத்திற்கொண்டு காரைதீவு பிரதேச சபையை அனைத்து சந்தர்ப்பங்களிலும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன் வலியுறுத்தினார். குறிப்பாக, மழைக்காலங்களில் ஏற்படக்கூடிய வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட பாதிப்புகளை குறைப்பதற்காக சபைக்குச் சொந்தமான வடிகான்கள் மற்றும் நீர்வழிகளை முறையாக சுத்தம் செய்து பராமரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார். இதேவேளை, 2026ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி வார நிகழ்ச்சித் திட்டம் எதிர்வரும் செப்டெம்பர் 14ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ள நிலையில், அதற்குத் தேவையான ஏற்பாடுகளுக்காக மதிப்பிடப்பட்டுள்ள செலவினத்தை சபை நிதியிலிருந்து மேற்கொள்வதற்கான அனுமதி கோரும் பிரேரணையும் முன்வைக்கப்பட்டது. மேலும், சபையினால் உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இடைக்கடன் தொகையை கடன் விண்ணப்பதாரர்களின் கோரிக்கைக்கு அமைய அதிகரித்து வழங்குவதற்கான அனுமதியும் கோரப்பட்டது. எதிர்வரும் மழைக்காலத்தை கருத்திற்கொண்டு காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் சபைக்குச் சொந்தமான வடிகான்களை சுத்தம் செய்வதற்காக நாளாந்த கொடுப்பனவு அடிப்படையில் ஊழியர்களை உள்வாங்கி அவர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்குவதற்கான அனுமதியும் சபையில் கோரப்பட்டது. மாவடிப்பள்ளியில் கடையொன்று தீக்கிரையாகியுள்ளதாக காரைதீவு பொலிஸாரிடமிருந்து கிடைத்த தகவலையடுத்து, செயலாளரும் தானும் தொடர்புகொண்டு முன்வைத்த கோரிக்கையின் பேரில் தீயணைப்பு வாகனத்தை அனுப்பிய கல்முனை மாநகர ஆணையாளர், பொறுப்பு அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு அதிகாரிகளுக்கு உப தவிசாளர் எம்.எச்.எம். இஸ்மாயில் நன்றிகளைத் தெரிவித்தார். அதேவேளை, குறித்த தீ விபத்து தொடர்பில் பொலிஸாரினால் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் பொறுப்பற்ற அறிவித்தல் தொடர்பில் தனது வருத்தத்தையும் அவர் தெரிவித்தார். மேலும், பிரதேசத்தில் உள்ள வடிகான்களை துரிதமாக சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் உப தவிசாளர் கோரிக்கை விடுத்தார். கௌரவ உறுப்பினர் ஏ.எம். ஜாஹீர், மாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலயத்திற்கு அருகில் செல்லும் வீதியை காரைதீவு லெனின் வீதியுடன் இணைக்கும் வகையில் புதிய வீதி அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தார். அத்துடன், மாளிகைக்காடு கிழக்கு வட்டாரத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும், அப்பகுதியில் காணப்படும் வடிகான்களை சுத்தம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை முன்வைத்தார். கௌரவ உறுப்பினர் எம்.என்.எம். ரணீஸ், மாவடிப்பள்ளி பிரதேசத்தின் வீதிகள் பலவும் புனரமைக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளதாக சுட்டிக்காட்டியதுடன், அவற்றை முழுமையாக புனரமைப்பதற்காக மாகாண பன்முகப்படுத்தப்பட்ட நிதியைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தார். காரைதீவு பிரதேசத்தின் வீதி, வடிகான் மற்றும் அடிப்படை உட்கட்டமைப்பு தேவைகள் தொடர்பில் சபை உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக சபை நிர்வாகத்தினால் தெரிவிக்கப்பட்டது. இந்த சபை அமர்வில் 1987ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, நீர் கூட அருந்தாமல் 12 நாட்கள் உண்ணாவிரதமிருந்து செப்டம்பர் 26 அன்று வீரச்சாவடைந்த திலீபனுக்கு சபை உறுப்பினர்களால் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments

Subscribe Us