Column Left

Vettri

Breaking News

எல் நினோ காலநிலை மாற்றம் மற்றும் பயிர்ச்செய்கையில் அதன் தாக்கம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு.!!




(சேனையூர் நிருபர்) எல் நினோ காலநிலை மாற்றம் மற்றும் அதன் காரணமாக பயிர்ச்செய்கைக்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (11) திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. தற்போது நிலவும் காலநிலையில் காணப்படும் அசாதாரண மாற்றங்கள், அவற்றின் காரணமாக சுற்றாடல், மக்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள், அத்துடன் இத்தகைய நிலைமைகளை எதிர்கொள்வதற்கான முன் தயார்நிலை நடவடிக்கைகள் தொடர்பில் நிகழ்வில் விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன. நிகழ்வின் வளவாளராகக் கலந்துகொண்ட கிளிநொச்சி மாவட்ட விவசாயப் பணிப்பாளர் எஸ். ராஜேஸ்கண்ணா அவர்கள், எல் நினோ காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் மற்றும் அதனை எதிர்கொள்ள விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாக விளக்கமளித்தார். மேலும், எதிர்வரும் பெரும்போகப் பயிர்ச்செய்கையின்போது குறுகிய காலத்தில் அறுவடையைப் பெறக்கூடிய விதை வகைகளைப் பயன்படுத்துவது தொடர்பிலும் அவர் விவசாயிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். இதன்போது, மழைவீழ்ச்சியில் ஏற்படக்கூடிய அதிகரிப்பு அல்லது குறைவு காரணமாக உருவாகக்கூடிய, வெள்ளம் மற்றும் வறட்சி அபாயங்கள், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதன் அவசியம் மற்றும் நீரைச் சேமித்து வைப்பதன் முக்கியத்துவம் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்கள் கருத்து தெரிவித்தார். இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி . ஜெ. ஸ்ரீபதி, மாவட்ட விவசாய பணிப்பாளர் திருமதி. டி.கே. சசிகுமார், தேசிய உரச் செயலகத்தின் மாவட்டத்திற்கான பிரதி பணிப்பாளர் எச். ஜி. எஸ். பிரேமரத்ன, அரச நிறுவனங்களின் அதிகாரிகள், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

No comments

Subscribe Us