Column Left

Vettri

Breaking News

அக்கரைப்பற்று மத்திய பேருந்து நிலையத்தில் சுகாதார சீர்கேடு – பயணிகள் விசனம்!!




(அக்கரைப்பற்று, செப். 11 ஜே.கே.யதுர்ஷன்) அக்கரைப்பற்று மாநகர சபைக்குச் சொந்தமான அக்கரைப்பற்று மத்திய பேருந்து நிலையம் உரிய முறையில் துப்புரவு செய்யப்படாமல் சுகாதார சீர்கேட்டுடன் காணப்படுவதாக பயணிகளும் பொதுமக்களும் விசனம் தெரிவித்துள்ளனர். பேருந்து நிலையப் பகுதியில் மாட்டு எரு உள்ளிட்ட கழிவுகள் மற்றும் குப்பைக் கூளங்கள் குவிந்து காணப்படுவதால், அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதாகவும், இதனால் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், பிளாஸ்டிக் போத்தல்களை சேகரிப்பதற்காக வைக்கப்பட்டுள்ள கூடையும் நிரம்பிய நிலையில் காணப்படுவதாகவும், அதிலுள்ள குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் போத்தல்கள் பலத்த காற்று வீசும் நேரங்களில் காற்றில் பறந்து பொதுமக்கள் மீது விழும் நிலை காணப்படுவதாகவும் பயணிகள் சுட்டிக்காட்டுகின்றனர். பொதுமக்கள் தினமும் அதிகளவில் பயன்படுத்தும் முக்கியமான பேருந்து நிலையம் இவ்வாறு சுகாதாரமற்ற நிலையில் காணப்படுவது கவலைக்குரிய விடயம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, அக்கரைப்பற்று மத்திய பேருந்து நிலையப் பகுதியில் காணப்படும் மாட்டு எரு, குப்பைக் கூளங்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை உடனடியாக அகற்றி, பேருந்து நிலையத்தை முறையாக துப்புரவு செய்து சுகாதாரமான சூழலை ஏற்படுத்தித் தருவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments

Subscribe Us