தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் காயத்ரி வித்தியாலய மாணவர்கள் அபார சாதனை
(திருக்கோவில், செப். 07:
ஜே.கே.யதுர்ஷன்)
கடந்த வாரம் வெளியான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட திகோ/காயத்ரி வித்தியாலயத்தில் இருந்து பரீட்சைக்குத் தோற்றிய 7 மாணவர்களில் 6 மாணவர்கள் மாவட்ட வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்று சிறப்பான பெறுபேற்றை வெளிப்படுத்தியுள்ளனர்.
குறித்த மாணவர்களின் சிறந்த பெறுபேற்றுக்குப் பின்னால் அவர்களை ஆரம்பம் முதல் வழிப்படுத்திய பாடசாலையின் தரம் 1 முதல் தரம் 5 வரையிலான அனைத்து ஆசிரியர்களினதும் அர்ப்பணிப்பு மற்றும் அதிபரின் வழிகாட்டலையும் பாராட்டும் வகையில் விசேட கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.
திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகத்தின் ஆரம்பக் கல்விப் பிரிவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஆசிரியர்கள் அனைவருக்கும் நினைவுப் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மேலும், தரம் 5 மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியை திருமதி. புஷ்பலதா வேலும் மயிலும் அவர்களுக்கு விசேட கௌரவம் வழங்கப்பட்டது. இதன்போது அவருக்கு மலர்மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி, நினைவுப் பரிசுடன் நினைவுச் சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வில் திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. உதயகுமார், பிரதிக் கல்விப் பணிப்பாளர் (கல்வி அபிவிருத்தி), பிரதிக் கல்விப் பணிப்பாளர் (ஆரம்பக் கல்வி மற்றும் கல்வி முகாமைத்துவம்), உதவிக் கல்விப் பணிப்பாளர் (தமிழ்), ஆரம்பக் கல்வி ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் PSI இணைப்பாளர் உள்ளிட்ட கல்வி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதன்போது காயத்ரி வித்தியாலயத்தின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் சிறந்த பெறுபேற்றைப் பாராட்டிய கல்வி அதிகாரிகள், எதிர்காலத்திலும் கல்வித் துறையில் சிறப்பான பெறுபேறுகளைப் பெறுவதற்கான வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் பரீட்சைக்குத் தோற்றிய 7 மாணவர்களில் 6 பேர் மாவட்ட வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்றுள்ளமை, குறித்த பாடசாலையின் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு, மாணவர்களின் முயற்சி மற்றும் பாடசாலை நிர்வாகத்தின் சிறந்த வழிகாட்டலுக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது
No comments