திருகோணமலையில் 250 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகளுக்கு தமிழர்களின் கலை, கலாசாரம் மற்றும் ஆன்மிக வரவேற்பு..!
(சேனையூர் நிருபர்)
திருகோணமலைக்கு செவ்வாய்க்கிழமை (01) வருகை தந்த சுமார் 250 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள், வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கோணேஸ்வரம் கோயிலுக்கு விஜயம் செய்து சிறப்பு தரிசனத்தில் ஈடுபட்டனர்.
வருகை தந்த சுற்றுலாப் பயணிகளுக்கு பரதநாட்டிய நிகழ்வுடன் பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழர்களின் கலை, கலாசாரம் மற்றும் ஆன்மிகப் பாரம்பரியத்தை வெளிப்படுத்திய இந்த நிகழ்வு, ஜப்பானிய சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
திருகோணமலை மாவட்டத்தின் சுற்றுலா, முதலீடு மற்றும் வர்த்தக வாய்ப்புகளை ஜப்பான் மக்களுக்கு அறிமுகப்படுத்தும் முக்கிய முயற்சியாக இந்த விஜயம் அமைந்துள்ளது.
திருகோணமலை மாவட்ட ஹோட்டல் சங்கத் தலைவர் குமார் ஜெயக்குமாரன் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த முயற்சியின் ஊடாக, எதிர்காலத்தில் மேலும் அதிகமான ஜப்பானிய சுற்றுலாப் பயணிகளை கிழக்கு மாகாணத்திற்கு அழைத்து வருவதற்கும், முதலீட்டு வாய்ப்புகளை ஆராய்வதற்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
No comments