Column Left

Vettri

Breaking News

கட்டிட அனுமதி, நடைமுறை சிக்கல்கள் தொடர்பில் ஆலையடிவேம்பு பிரதேச சபை – திணைக்களங்களுடன் கலந்துரையாடல்!!




(செல்வி வினாயக மூர்த்தி) ஆலையடிவேம்பு பிரதேச சபையில் கட்டிட அனுமதிப்பத்திரம் கோரி சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களைப் பரிசீலித்தல், விண்ணப்பங்களுடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் மற்றும் தொடர்புடைய கோவை குறித்து தெளிவுபடுத்தும் நோக்கில் சம்பந்தப்பட்ட அரச திணைக்கள அதிகாரிகளுடனான கலந்துரையாடல் இன்று (20) வியாழக்கிழமை பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் ஆரியதாச தர்மதாச தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், பிரதேச சபை செயலாளர் எஸ். திவாகரன், உப தவிசாளர் கே. ரகுபதி மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதன்போது, கட்டிட அனுமதிப்பத்திரங்களை வழங்குவதில் எதிர்நோக்கும் நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் தாமதங்கள் விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் மற்றும் ஏற்கனவே கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் தொடர்பான விடயங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. மேலும், அம்பாறை வீதி மற்றும் சாகாம வீதிகளில் காணப்படும் வடிகான்களுக்கு மூடிகள் அமைத்தல், வீதி விளக்குகளைப் பொருத்துதல், குறிப்பாக பனங்காட்டுப் பகுதியில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி வீதி விளக்குகளை அமைக்கும் பணிகளை ஆரம்பித்தல்,குளங்களின் பாதுகாப்பு மற்றும் புனரமைப்பு, உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன், பிரதான வீதிகளின் இருமருங்கிலும் வாகனப் போக்குவரத்துக்கும் பாதசாரிகளின் நடமாட்டத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் விற்பனைக்காக செங்கற்கள், மணல் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களை குவித்து வைப்பதைத் தடுப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. இதன்போது, பிரதேச சபை உறுப்பினர்களால் பிரதேசத்தில் நிலவும் சமகால நடைமுறைப் பிரச்சினைகள் மற்றும் சந்தேகங்கள் தொடர்பில் கேள்விகள் முன்வைக்கப்பட்டதுடன், அவற்றுக்கான விளக்கங்களும் தீர்வுகளுக்கான ஆலோசனைகளும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் வழங்கப்பட்டன. இக்கலந்துரையாடலில் கமநல சேவைகள் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம், கரையோரப் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்களம், வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஆகிய அரச நிறுவனங்களின் பொறுப்பு அதிகாரிகள் கலந்துகொண்டு, தங்களது துறைகள் சார்ந்த நடைமுறைகள் மற்றும் தீர்வுகள் தொடர்பில் விளக்கமளித்தனர். பொதுமக்கள் எதிர்நோக்கும் நடைமுறைச் சிக்கல்களை குறைத்து, சம்பந்தப்பட்ட அரச திணைக்களங்களுடன் ஒருங்கிணைந்து செயற்படுவதற்கான புரிதலை ஏற்படுத்தும் வகையில் இக்கலந்துரையாடல் அமைந்திருந்தது.

No comments

Subscribe Us