ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே நன்றாக படிக்க முடியும்; மூளை சரியாக இயங்கினால் மட்டுமே நினைவாற்றல் அதிகமாக இருக்கும்!!
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சகீலா இஸ்ஸதீன்
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே நன்றாக படிக்க முடியும். மூளை சரியாக இயங்கினால் மட்டுமே நினைவாற்றல் அதிகமாக இருக்கும். எனவே கட்டாயமாக மாணவர்கள் கோதுமை மா உணவுகளைத் தவிர்த்து காய், கறி உணவுகளை அதிகம் சாப்பிடுமாறு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரும் இப் பாடசாலையின் பழைய மாணவியுமான சகீலா இஸ்ஸதீன் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
சாய்ந்தமருது அல்கமறூன் வித்யாலயத்தில் மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டி நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
சுவர் இருந்தால்த்தான் சித்திரம் வரைய முடியும் என்ற வாசகத்திற்கு ஏற்ப மாணவர்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கு கோதுமை மாவினால் தயாரிக்கப்பட்ட உணவுகளைத் தவிர்த்து மரக்கறி உணவு வகைகளை அதிகம் உட்கொள்ளுமாறும் அதற்கு முக்கியத்துவம் கொடுக்குமாறும் தெரிவித்தார்.
இலகுவில் கிடைக்கும் என்பதற்காக கோதுமை மா உணவுகளை மாணவர்களுக்கு வாங்கிக் கொடுக்காது பிள்ளைகளுக்கு வீட்டில் தயாரித்த உணவுகளை கொடுத்து அனுப்புமாறும் அதுவே அது ஆரோக்கியமாக இருக்கும் என்றும் அவர் பெற்றோருக்கு ஆலோசனை வழங்கினார்.
டெங்கு பரவும் பிரதான காரணங்களாக யோகட் கப், சிரட்டை போன்றவை முன்பு காணப்பட்டது. தற்போது டெங்கு பரவும் பிரதான இடங்களாக வீட்டின் மேற்புறத்தில் காணப்படும் தண்ணீர்த் தொட்டி மற்றும் குழாய்க்கிணறு போன்ற இடங்கள் காணப்படுவதாகவும் இவற்றை அடிக்கடி பார்வையிட்டு, தேங்கி காணப்படும் தேவையற்ற நீர் போன்றவற்றை அகற்றி சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை வீடுகளில் மேற்கொள்ள முடியும் என்றும் பெற்றோருக்கு ஆலோசனை வழங்கினார். இதனை பெற்றோருக்கு தெரியப்படுத்துமாறும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
மாணவர்கள் தெரியாத யாரிடமும் உறவாட வேண்டாம் என்றும் தெரிவித்த அவர், பிழையான தொடுகை மற்றும் சரியான தொடுகை பற்றியும் விளங்கப்படுத்தினார்.
பிழையாக யாரும் மாணவர்களை அணுகும்போது அல்லது தொடும் பொழுது எந்தவித பயமும் இல்லாமல் அதனை உடனே தங்களுடைய பெற்றோர்களிடம் கட்டாயம் தெரிவிக்கும் படியும் இதனால் பல பிரச்சினைகளை ஆரம்பத்திலே தவிர்க்க முடியும் என்றும் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
பாடசாலையின் அதிபர் எம்.எச். நுஸ்ரத் பேகம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மாணவத் தலைவர்களுக்கு சின்னம் சூட்டி நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டதோடு, இரண்டாம் தவணைப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப் பட்டனர்.
அத்தோடு, பாடசாலைக்கு விடுமுறை எடுக்காமல் தொடர்ந்து வருகை தந்த மாணவர்களும் சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில், ஆசிரியைகள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கட்டுறு பயிற்சி ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு உறுப்பினர் மற்றும் பெற்றோர்கள் உட்பட மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனர்.
No comments