Column Left

Vettri

Breaking News

ஜனாதிபதி பொதுமன்னிப்பு: முறையான பொறிமுறை அறிக்கை விரைவில் அமைச்சரவைக்கு!!




தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவதற்காக முறையான பொறிமுறை ஒன்றை உருவாக்குவது தொடர்பில் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பு விளக்கமறியல், புதிய மகசின் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளின் செயற்பாடுகளைப் பார்வையிட்டு, பெண் மற்றும் ஆண் கைதிகளின் பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடிய போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவதற்கான முறையான பொறிமுறையைத் தயாரிக்கும் நோக்கில், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜா தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது. பத்து மாத காலத்திற்குள்ளான ஆய்வுக்குப் பின்னர் குறித்த குழுவின் அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் அங்கு தெரிவித்தார். ஜனாதிபதி பொதுமன்னிப்பை வழங்குவதற்கான முறையான பொறிமுறையைத் தயாரித்தல், மரண தண்டனை அனுபவிக்கும் கைதிகளின் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தல், ஆயுள் தண்டனை அனுபவிக்கும் கைதிகளின் தண்டனைக் காலத்தை 20 ஆண்டுகளாகக் குறைத்தல் மற்றும் கைதிகளுக்கு வீட்டு விடுமுறை வழங்குதல் போன்ற விடயங்கள் தொடர்பில் குறித்த குழுவினால் பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் விடுதலையாகிச் செல்வதற்கான முறையான பொதுமன்னிப்புப் பொறிமுறை ஒன்றை உருவாக்குவது தொடர்பான விடயங்கள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் எனவும் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார். அரசாங்க பகுப்பாய்வு அறிக்கைகளின் தாமதம் காரணமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெண் மற்றும் ஆண் கைதிகளைச் சந்தித்த அமைச்சர், அந்த அறிக்கைகளைக் விரைவாக வழங்குவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

No comments

Subscribe Us