Column Left

Vettri

Breaking News

அக்கரைப்பற்றில் இலக்கிய மனனப் போட்டிக்கான தெரிவுப் போட்டி.!!




(செல்வி வினாயகமூர்த்தி) மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனின் நூற்றாண்டு பயணத்தை முன்னிட்டு, அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 26ம்திகதி புதன்கிழமை நடைபெறவுள்ள “இலக்கிய மனனப் போட்டி நிகழ்வுக்கான தெரிவுப் போட்டி இன்று (22) சனிக்கிழமை அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்ற கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. மாணவர்களின் ஒழுக்கம், நல்லொழுக்கப் பாதை மற்றும் இலக்கிய ஆர்வத்தை மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்போட்டியில், ஆலையடிவேம்பு கோட்டத்திற்குட்பட்ட ஏழு பாடசாலைகளிலிருந்து 42 மாணவர்கள் பங்கேற்றனர். திருக்குறள், நாலடியார், இனியவை நாற்பது மற்றும் ஆத்திச்சூடி ஆகிய இலக்கியப் பிரிவுகளில் மாணவர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்தினர். இதேவேளை, “விவேகானந்தமே ஆனந்தம்” என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புப் பேச்சுப் போட்டிக்கான தெரிவில் 06 மாணவர்கள் பங்கேற்றனர். இதன்படி மொத்தமாக ஆலையடிவேம்பு கோட்டத்திலிருந்து இலக்கிய மனனப்போட்டிக்காக 48 மாணவர்கள் தெரிவுக்கான நிகழ்வில் பங்கேற்றனர். தெரிவுப் போட்டிக்கு நடுவர்களாக திருமதி சோதீஸ்வரி கமலநாதன்(SLEAS), ஓய்வுபெற்ற ஆசிரியர்களான திருமதி புவனேஸ்வரி ஜெயகாந்தன், திருமதி ஜெகதீஸ்வரி நாதன், திரு எம். சந்திரசேகரம், ஓய்வுபெற்ற அதிபர்களான திருமதி லோகநாயகி கோபாலப்பிள்ளை, திரு பி. நாதன் மற்றும் திரு வை. கஜேந்திரன் வளவாளர் இந்து கலாசார அமைச்சு ஆகியோர் கலந்துகொண்டனர். இத்தெரிவுப் போட்டியில் தி/கோ/விநாயகர் மகா வித்தியாலயம், தி/கோ/தம்பட்டை மகா வித்தியாலயம், தி/கோ/பனங்காடு பசுபதீஸ்வர வித்யாலயம், தி/கோ/கண்ணகி வித்யாலயம், தி/கோ/இராமகிருஷ்ணா தேசிய பாடசாலை, தி/கோ/இராமகிருஷ்ணா மிஷன் மகாவித்தியாலயம் மற்றும் தி/கோ/திருநாவுக்கரசு வித்யாலயம் ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். இதற்கான பிரதான நிகழ்வு எதிர்வரும் 26ஆம் திகதி புதன்கிழமை காலை 9.30 மணிக்கு அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்ற கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. இதன்போது போட்டிகளில் தெரிவாகிய மாணவர்களுக்கு பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளதுடன், முதலாம் மற்றும் இரண்டாம் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் திறமைகள் மேடையில் அரங்கேற்றப்படவுள்ளன. “அறிவை கற்போம் – ஒழுக்கம் பேணுவோம் – இலக்கியம் வளர்ப்போம்!” என்ற தொனிப்பொருளில் நடைபெறும் இந்நிகழ்வில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றமை சிறப்பம்சமாகும்.

No comments

Subscribe Us