அதே ஆடையுடன் வேறு வைத்தியசாலையில் பணியாற்ற முடியும் என்றால், கல்முனை ஆதார வைத்தியசாலையில் ஏன் முடியாது?” – சட்டத்தரணி முஅஸ்ஸம் கேள்வி!!
(நூருல் ஹுதா உமர்)
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் சுகாதார சேவை கனிஷ்ட பணியாளர்களின் சீருடை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகள் தொடர்பான விசாரணை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய அலுவலகத்தில் இன்று (18) இடம்பெற்றது.
வைத்தியசாலை நிர்வாகத்துக்கு பொறுப்பான அதிகாரி மற்றும் மேற்பார்வை அதிகாரிகள் உள்ளிட்ட ஐவர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டு செய்யப்பட்டுள்ள முறைப்பாடுகள் தொடர்பிலேயே இந்த விசாரணை இடம்பெற்றது.
விசாரணையின்போது முறைப்பாட்டாளர்கள் அனைவரும் பிரசன்னமாகியிருந்ததுடன், அவர்களது சார்பில் சட்டத்தரணி எம்.எம்.எம். முஅஸ்ஸம் ஆஜராகியிருந்தார். பிரதிவாதிகள் ஐவரில் வைத்தியசாலை பணிப்பாளரைத் தவிர்ந்த நால்வரும் ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகியிருந்ததுடன், அவர்களது சார்பில் விசேட வைத்திய நிபுணர் ஒருவர் காப்பு உத்தியோகத்தராகப் பங்கேற்றிருந்தார்.
விசாரணையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சட்டத்தரணி எம்.எம்.எம். முஅஸ்ஸம், குறித்த சுகாதார சேவை கனிஷ்ட பணியாளர்களின் சீருடை விவகாரம் தொடர்பில் இலங்கை அரசியலமைப்பினால் உறுதிப்படுத்தப்பட்ட அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளமை தொடர்பான விளக்கங்களை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னிலையில் சமர்ப்பித்ததாக தெரிவித்தார்.
குறிப்பாக அரசியலமைப்பின் உறுப்புரைகள் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தாம் சுட்டிக்காட்டியதாகவும் அவர் கூறினார். இதற்கு பதிலளித்த வைத்தியசாலை தரப்பு, அரசாங்கத்தின் தாபன விதிக்கோவை, சுற்றறிக்கைகள் மற்றும் அவற்றில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்களின் அடிப்படையிலேயே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக ஆணைக்குழுவின் முன்னிலையில் தெரிவித்ததாகவும் சட்டத்தரணி முஅஸ்ஸம் குறிப்பிட்டார்.
அதேவேளை, அரசியலமைப்புக்கு முரணானதாக ஏதேனும் சுற்றறிக்கைகள் காணப்படுகின்றனவா என்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் தங்களுக்கு இல்லை எனவும், அது தொடர்பான இறுதி தீர்மானங்களை சுகாதார அமைச்சு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் உள்ளிட்ட உரிய அதிகாரிகளே மேற்கொள்ள வேண்டும் எனவும் வைத்தியசாலை தரப்பு தெரிவித்ததாக அவர் கூறினார்.
மேலும், இவ்விடயம் தொடர்பில் தாம் உரிய உயர் அதிகாரிகளுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் வைத்தியசாலை தரப்பு ஆணைக்குழுவின் முன்னிலையில் தெரிவித்ததாக சட்டத்தரணி முஅஸ்ஸம் தெரிவித்தார்.
தற்போது கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில், குறித்த சுகாதார சேவைப் பணியாளர்களுக்கு வேறு ஒரு வைத்தியசாலைக்கு இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், இந்தத் தகவல் இதுவரை அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்பதுடன், இடமாற்றக் கடிதமும் சம்பந்தப்பட்ட பணியாளர்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை எனவும் சட்டத்தரணி முஅஸ்ஸம் தெரிவித்தார்.
இந்நிலையில், அவர்கள் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு எந்த ஆடையுடன் பணிக்கு சமூகமளித்தார்களோ, அதே ஆடையுடன் வேறு ஒரு வைத்தியசாலையில் பணிக்கு அறிக்கையிடவுள்ளதாக தெரிவிக்கப்படுவது பல கேள்விகளை எழுப்புவதாகவும் அவர் குறிப்பிட்டார். “குறித்த ஆடை அனுமதிக்கப்படாத ஆடையாக இருந்திருந்தால், அதே ஆடையுடன் அவர்கள் வேறு ஒரு வைத்தியசாலையில் பணியாற்றுவதற்கு எவ்வாறு அனுமதிக்கப்பட முடியும்?” என அவர் கேள்வியெழுப்பினார்.
வேறு ஒரு வைத்தியசாலைக்கு இடமாற்றம் வழங்கப்படுவதன் மூலம் குறித்த ஆடை அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், அனுமதிக்கப்பட்டதாகவும் ஒரு நிலைப்பாடு உருவாகிறது எனவும் அவர் தெரிவித்தார். அவ்வாறான நிலையில், அதே ஆடையுடன் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் மட்டும் அவர்கள் பணியாற்ற முடியாத நிலை ஏன் ஏற்பட்டது என்பது தொடர்பில் தெளிவான விளக்கம் தேவைப்படுவதாகவும் அவர் கூறினார்.
“இலங்கையின் அதியுயர் சட்டமான அரசியலமைப்பை நடைமுறைப்படுத்த முடியாத நிலையில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை நிர்வாகம் இருக்கின்றதா என்ற கேள்வி எழுகிறது. அல்லது இலங்கையின் ஆட்சி எல்லைக்கு அப்பாற்பட்ட ஒரு பிரதேசத்தில் இந்த வைத்தியசாலை அமைந்துள்ளதா என்ற கேள்வியையும் தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது” என சட்டத்தரணி முஅஸ்ஸம் தெரிவித்தார்.
ஒரே பணியாளர்கள் ஒரே ஆடையுடன் வேறு ஒரு அரச வைத்தியசாலையில் பணியாற்ற முடியும் என்றால், அரசியலமைப்பினால் உறுதிப்படுத்தப்பட்ட உரிமைகளுக்கு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் ஏன் செயல்வடிவம் வழங்க முடியவில்லை என்பதை அரசாங்கம் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். சுற்றறிக்கைகளை மேற்கோள் காட்டி அரசியலமைப்பினால் உறுதிப்படுத்தப்பட்ட அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் பொறுப்பிலிருந்து அதிகாரிகள் விலக முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
இவ்விவகாரத்தை மேலும் பெரிதுபடுத்தும் வகையில் அறிந்தும் அறியாமலும் செயற்படும் அனைத்து தரப்பினரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் சட்டத்தரணி முஅஸ்ஸம் கேட்டுக்கொண்டார். குறிப்பாக சமூக ஊடகங்களில் பொறுப்பற்ற பதிவுகள் மற்றும் தனிநபர் தாக்குதல்களில் ஈடுபடுவது ஆரோக்கியமான, கற்றறிந்த சமூகத்துக்கு பொருத்தமானதல்ல என அவர் தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பில் முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் கருத்துக்களை பதிவிடுபவர்கள் மிகவும் அவதானத்துடனும் பொறுப்புணர்வுடனும் செயற்பட வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தங்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருப்பதாகவும், பாதிக்கப்பட்ட சுகாதார சேவைப் பணியாளர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கும் விடயத்தில் தாம் தொடர்ந்து விழிப்புடன் செயற்படுவதாகவும் சட்டத்தரணி முஅஸ்ஸம் தெரிவித்தார்.
சுற்றறிக்கைகளுக்கும் அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளுக்கும் இடையில் உருவாகியுள்ளதாகக் கூறப்படும் முரண்பாடு தொடர்பில் உரிய அமைச்சுக்கள் மற்றும் அரச திணைக்களங்களுக்கு எழுத்து மூலம் அறிவித்து, நிரந்தரமான தீர்வொன்றை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தப் பிரச்சினை குறித்த சுகாதார சேவை கனிஷ்ட பணியாளர்களுக்கு மாத்திரம் வரையறுக்கப்படவில்லை என்றும், சுகாதார சேவையில் தாதிய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட ஏனைய பணியாளர்களுக்கும் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடிய சாத்தியம் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். எனவே, சுகாதார அமைச்சு, சுகாதார சேவைகள் திணைக்களம் உள்ளிட்ட உரிய அதிகாரிகள் இந்த விடயத்தை பரந்துபட்ட அடிப்படையில் ஆராய்ந்து, அனைத்து சுகாதாரப் பணியாளர்களுக்கும் பொருந்தக்கூடிய தெளிவானதும் நிரந்தரமானதுமான கொள்கைத் தீர்வை வழங்க வேண்டும் என சட்டத்தரணி எம்.எம்.எம். முஅஸ்ஸம் வலியுறுத்தினார்.
ஊடக விடயங்களில் சட்டத்தரணிகளான எம்.என்.எம். நப்ரத் மற்றும் எம்.இசட்.எம். றியாஸ் ஆகியோரும் இணைந்திருந்தனர்.
No comments