Column Left

Vettri

Breaking News

வீடொன்றில் சார்ஜ் செய்யப்பட்ட கைத்தொலைபேசி திருட்டு- போதைப்பொருளுக்கு அடிமையான சந்தேக நபர் கைது!!




பாறுக் ஷிஹான்-சவளக்கடை குறுப் நிருபர் அம்பாறை மாவட்டம், கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நற்பிட்டிமுனை பகுதியில், வீடொன்றில் சார்ஜ் போடப்பட்டிருந்த கைத்தொலைபேசியை திருடிய குற்றச்சாட்டில் 21 வயதுடைய சந்தேக நபர் கல்முனை தலைமையக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு இன்று செய்திருந்தார். குறித்த முறைப்பாட்டில், தனது வீட்டில் ரூ. 35,000/- பெறுமதியான கைத்தொலைபேசியை சார்ஜ் போட்டுவிட்டு தனது தேவை நிமித்தம் வெளியே சென்று திரும்பியபோது, ஜன்னல் கண்ணாடி உடைக்கப்பட்டு தொலைபேசி களவாடப்பட்டு இருந்ததாகத் தெரிவித்திருந்தார். இம்முறைப்பாட்டின் அடிப்படையில் உடனடியாக செயற்பட்ட பொலிஸார், குறித்த வீட்டின் எதிர் வீட்டில் தங்கியிருந்த 21 வயதுடைய இளைஞனைச் சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர். சந்தேகநபர் திருடப்பட்ட கைத்தொலைபேசியைத் தனது உறவினர் ஒருவரின் வீட்டில் மறைத்து வைத்திருந்த நிலையில், அதனை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர். அத்துடன், சந்தேக நபரிடமிருந்து ஒரு தொகை 'ஐஸ்' (ICE) போதைப்பொருளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். ஆரம்பக்கட்ட விசாரணைகளில், கைதான நபர் போதைப்பொருளுக்கு தீவிரமாக அடிமையானவர் என்பதுடன் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் மட்டும் இவர் மீது 7 குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளதாக எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் தெரிவித்தார். சந்தேகநபரை சட்ட நடவடிக்கைக்காகக் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசார் ஆலோசனைக் கமைய,கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான அலியார் றபீக் தலைமையிலான பொலிஸ் குழுவினர் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments