Column Left

Vettri

Breaking News

நோர்வூட் அஸ்வெசும மோசடி தொடர்பில் மேலும் இரு உத்தியோகஸ்தர்கள் பணி நீக்கம்!!




நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற அஸ்வெசும ஊழல் மோசடி தொடர்பில், நோர்வூட் பிரதேச செயலகத்தைச் சேர்ந்த மேலும் இரு முகாமைத்துவ சேவை உத்தியோகஸ்தர்கள் உடனடியாக அமலுக்கு வரும்வகையில் கடந்த 06ஆம் திகதியிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவித்தார். நோர்வூட் பிரதேச செயலகத்தில், குறைந்த வருமானத்தை பெறும் குடும்பங்களுக்கு வழங்க வேண்டிய 16 மில்லியன் ரூபாய் அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவில் 11 அரச ஊழியர்கள் மோசடி செய்திருக்கலாமென விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதற்கு மேலதிகமாக இலட்சக் கணக்கான ரூபாய் அஸ்வெசும கொடுப்பனவை தங்களது வங்கிக் கணக்குகள் மற்றும் தங்களுக்கு நெருக்கமானவர்களின் வங்கிக் கணக்குகளில் மோசடியான முறையில் வரவு வைத்துள்ள 09 அரச உத்தியோகஸ்தர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாகவும் துஷாரி தென்னகோன் மேலும் தெரிவித்தார். அஸ்வெசும மோசடி தொடர்பில், நோர்வூட் பிரதேச செயலகத்தின் கீழ் பணிப்புரியும் பொகவந்தலாவையைச் சேர்ந்த உதவி இளைஞர் சேவை அதிகாரி ஒருவரும், தலவாக்கலை பிரதேச செயலகத்தின் கீழ் பணிப்புரியும் உதவி இளைஞர் சேவை அதிகாரிக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்குமாறு, நுவெரலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் கடிதம் ஊடாக பணிப்புரை விடுத்துள்ளார். இதன்படி, சம்மந்தப்பட்ட இரு இளைஞர் சேவை அதிகாரிகளுக்கு எதிராகவும் தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் உள்ளகக் கணக்காய்வு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்திருந்த நிலையில், இரு அதிகாரிகளும் கொழும்புக்கு அழைக்கப்பட்டு வெள்ளிக்கிழமை (07) வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்கு மேலதிகமாக, ஹட்டன் கல்விப் பணிமனையின் கீழ் பணிப்புரியும் 6 ஆசிரியர்களின் வங்கிக் கணக்கில் அஸ்வெசும கொடுப்பனவு முறைகேடான முறையில் வரவு வைக்கப்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு மத்திய மாகாண பிரதம செயலாளர் அஜித் பிரேமசிங்கவுக்கு கடிதம் ஊடாக துஷாரி தென்னகோன் அறிவித்துள்ளார். அட்டன் கல்வி வலயத்தின் கீழுள்ள அனைத்து ஆசிரியர்களின் தகவல்கள் திரட்டப்பட்டு விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அட்டன் கல்வி வலயப் பணிமனை தெரிவிக்கிறது. அஸ்வெசும ஊழல் மோசடி தொடர்பில் ஹட்டன் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தைச் சேர்ந்த முகாமைத்துவ சேவை உத்தியோகஸ்தருக்கு எதிராகவும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. அஸ்வெசும ஊழல் மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மேற்குறித்த அதிகாரிகளுக்கு எதிராக நோர்வூட் பிரதேச செயலாளர் ஜி.எஸ்.டி கம்லத், அட்டன் பொலிஸ் நிலையத்தின் விசேட குற்ற விசாரணை பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார். எவ்வாறாயினும், இதுவரையில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக அட்டன் பொலிஸ் நிலைய விசேட குற்ற விசாரணை பிரிவு வாக்குமூலங்களை பதிவு செய்யவில்லை எனவும் தெரியவருகிறது. நோர்வூட் பிரதேச செயலகத்தைச் சேர்ந்த இரு அதிகாரிகள் இதற்கு முன்னர் அட்டன் விசேட குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நலன்புரி நன்மைகள் சபையால் முன்னெடுக்கப்பட்டு வரும் நோர்வூட் பிரதேச செயலகத்தின் கணக்காய்வு விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுமென நுவரெலியா மாவட்டச் செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவித்தார்.

No comments

Subscribe Us