மையவாடி பிரச்சினைக்கு மாளிகைக்காடு பள்ளிவாசல்கள் மற்றும் பொது அமைப்புகளின் சம்மேளனத்துடன் பிரதேச சபை கலந்துரையாட வேண்டும் – உப தவிசாளர் இஸ்மாயில்
(நூருல் ஹுதா உமர்)
மாளிகைக்காடு மக்களுக்கான நிரந்தரமான மாற்று மையவாடியை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை காரைதீவு பிரதேச சபை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என காரைதீவு பிரதேச சபையின் உப தவிசாளர் எம்.எச்.எம். இஸ்மாயில் வலியுறுத்தியுள்ளார்.
காரைதீவு பிரதேச சபையின் மாதாந்த அமர்வில் உரையாற்றிய அவர், மாளிகைக்காடு பள்ளிவாசல்கள் மற்றும் பொது அமைப்புகளின் சம்மேளனத்துடன் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
அந்தக் கலந்துரையாடல்களின் அடிப்படையில், காரைதீவு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட மாளிகைக்காடு மேற்கு பகுதியில் மையவாடிக்காக பயன்படுத்தக்கூடிய காணியொன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், குறித்த காணியை மையவாடிக்காக பெற்றுக்கொள்வதற்கான சட்டரீதியான மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை பிரதேச சபை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இது தொடர்பாக கருத்து தெரிவித்த பிரதேச சபை தவிசாளர், குறித்த காணி அரசாங்கத்தின் கீழுள்ள விவசாய காணியாக இருப்பதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகவும், பொதுத் தேவைக்காக அதனைப் பெற்றுக்கொள்வதற்கு உரிய நடைமுறைகளைப் பின்பற்ற முடியும் எனவும் குறிப்பிட்டிருந்ததாக உப தவிசாளர் தெரிவித்தார்.
மேலும், குறித்த விடயம் தொடர்பில் சாதகமான சமிக்ஞை கிடைத்துள்ளதாகவும் தவிசாளர் தெரிவித்திருந்த நிலையில், அந்த வாய்ப்பை பயன்படுத்தி மாளிகைக்காடு மக்களுக்கான நிரந்தரத் தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
“மாளிகைக்காடு மக்களுக்கு மையவாடி என்பது சாதாரண தேவையல்ல. அது ஒரு அடிப்படை மனிதாபிமானத் தேவையாகும். ஒரு சமூகத்தின் இறந்தவர்களை கண்ணியத்துடனும் அவர்களின் மத உரிமைகளுடனும் நல்லடக்கம் செய்வதற்கான நிரந்தர இடம் அவசியமாகும்” என அவர் தெரிவித்தார்.
மாளிகைக்காடு மக்கள் அடையாளம் காட்டியுள்ள காணியை அடிப்படையாகக் கொண்டு பிரதேச சபை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பிரதேச சபையின் தலைமையில் மாளிகைக்காடு பள்ளிவாசல்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களின் அதிகாரிகளை அழைத்து விசேட கலந்துரையாடலொன்றை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
அத்துடன், காணியைப் பெற்றுக்கொள்வதற்கான நடைமுறைகள், அதற்கு தேவைப்படும் காலம் மற்றும் பெற வேண்டிய அனுமதிகள் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு பிரதேச சபைக்கு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
“காணியை அரசாங்க ரீதியாகப் பெற்றுக்கொள்வது நீண்டகால நடைமுறையாக இருக்கலாம். ஆனால் நடைமுறை சிக்கலானது என்பதற்காக முயற்சியை கைவிட முடியாது. மாளிகைக்காடு மக்களுக்கு தீர்வு வேண்டும். அந்தத் தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கான நடைமுறையை காரைதீவு பிரதேச சபை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும்” என உப தவிசாளர் எம்.எச்.எம். இஸ்மாயில் தெரிவித்தார்.
இதேவேளை, கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் புதிதாக சுகாதார உதவியாளர்களாக நியமிக்கப்பட்ட முஸ்லிம் பெண் உத்தியோகத்தர்கள் கடமையைப் பொறுப்பேற்கச் சென்றபோது, அவர்களின் மத மற்றும் கலாச்சார உடை தொடர்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டு தடைகள் ஏற்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவத்திற்கும் அவர் கடும் கண்டனம் தெரிவித்தார்.
அரச சேவையில் பணியாற்றும் ஒவ்வொருவருக்கும் தமது மத மற்றும் கலாச்சார அடையாளங்களைப் பேணுவதற்கான உரிமை இருப்பதாகவும், அதேவேளை அரச நிறுவனங்களின் சீருடை மற்றும் ஒழுங்குமுறைகளும் மதிக்கப்பட வேண்டிய நிலையில், இரண்டுக்கும் இடையில் சட்டரீதியான சமநிலையை ஏற்படுத்துவது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பொது நிர்வாக அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகள் மற்றும் அரச சேவை ஆடை தொடர்பான விதிமுறைகளை அதிகாரிகள் உரிய முறையில் கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இந்த விவகாரத்தை ஒரு தனிநபரின் விருப்பு அல்லது வெறுப்பு என்ற அடிப்படையில் அணுக முடியாது என தெரிவித்த அவர், இது அரச சேவையில் சமத்துவம், மத சுதந்திரம், நிர்வாக நியாயம் மற்றும் சமூக நல்லிணக்கத்துடன் தொடர்புடைய முக்கியமான பிரச்சினை எனவும் குறிப்பிட்டார்.
“கடந்த காலங்களில் இனவாதமும் மதவாதமும் பல்வேறு பிரச்சினைகளை உருவாக்கியுள்ளன. அந்தக் கசப்பான அனுபவங்களில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப வேண்டிய காலகட்டத்தில் அரச நிறுவனங்களுக்குள் இருந்து இன அல்லது மத அடையாளங்களை கேள்விக்குள்ளாக்கும் நடவடிக்கைகள் இடம்பெறுவது ஆபத்தானது” என அவர் தெரிவித்தார்.
அரசாங்கம் இனவாதத்திற்கும் மதவாதத்திற்கும் எதிரான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வரும் நிலையில், அதற்கு முரணான வகையில் செயற்படும் அதிகாரிகள் தொடர்பில் அரசாங்கம் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
குறித்த சம்பவம் தொடர்பில், அதிகாரிகள் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒரு சமூகத்தின் மத அல்லது கலாச்சார உரிமையை கட்டுப்படுத்த முயன்றார்களா, அரச சுற்றறிக்கைகள் மற்றும் நிர்வாக விதிமுறைகள் மீறப்பட்டனவா, புதிதாக நியமிக்கப்பட்ட உத்தியோகத்தர்களை கடமையைப் பொறுப்பேற்கவிடாமல் தடுப்பதற்கு சட்டரீதியான அதிகாரம் இருந்ததா என்பன தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
“இது எந்த ஒரு சமூகத்தையும் எதிர்த்து முன்வைக்கப்படும் கோரிக்கை அல்ல. இது சட்டத்தின் ஆட்சியை பாதுகாப்பதற்கான கோரிக்கை. அரச சேவையில் சமத்துவத்தை உறுதி செய்வதற்கான கோரிக்கை. மத சுதந்திரத்தை பாதுகாப்பதற்கான கோரிக்கை. எமது பிரதேசத்தின் இன நல்லிணக்கத்தை பாதுகாப்பதற்கான கோரிக்கை” என உப தவிசாளர் எம்.எச்.எம். இஸ்மாயில் தெரிவித்தார்.
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தப்பட்டு உண்மை நிலை வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றும், தவறு செய்த அதிகாரிகள் இருப்பின் அவர்களுக்கு எதிராக உரிய ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
“மாளிகைக்காடு மையவாடி பிரச்சினைக்கும், கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பிரச்சினைக்கும் அடிப்படையில் தேவைப்படுவது மக்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் மதிக்கும் நிர்வாகமே. இனவாதத்திற்கும் மதவாதத்திற்கும் இடமில்லாத, அனைத்து சமூகங்களும் சம உரிமையுடனும் கண்ணியத்துடனும் வாழக்கூடிய சமூகத்தை கட்டியெழுப்புவதே எமது இலக்காக இருக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.
No comments