Column Left

Vettri

Breaking News

கல்வி என்பது புத்தக அறிவை மட்டுமல்ல, ஒழுக்கம், பொறுப்புணர்வு, சுத்தம், ஒற்றுமை மற்றும் தலைமைத்துவப் பண்புகளையும் மாணவர்களிடம் வளர்க்கும் ஒரு முழுமையான செயல்முறையாகும் : பிரதி கல்வி பணிப்பாளர் எம்.எச்.எம். ஜாபிர்!!




நூருல் ஹுதா உமர் கல்வி என்பது புத்தக அறிவை மட்டுமல்ல, ஒழுக்கம், பொறுப்புணர்வு, சுத்தம், ஒற்றுமை மற்றும் தலைமைத்துவப் பண்புகளையும் மாணவர்களிடம் வளர்க்கும் ஒரு முழுமையான செயல்முறையாகும். ஒரு சுத்தமான, ஒழுங்கான மற்றும் அழகான வகுப்பறை மாணவர்களின் கற்றல் ஆர்வத்தை அதிகரிப்பதோடு, அவர்களின் சிந்தனைத் திறனையும் படைப்பாற்றலையும் மேம்படுத்துவதை உணர்த்தும் வகையில் பாடசாலை நிர்வாகத்திற்கும் ஆசிரியர்களுக்கும் பொறுப்பு இருக்கிறது என கல்முனை கல்வி வலயத்தின் ஸ்தாபன மற்றும் பொது நிர்வாக பிரதிக்கல்வி பணிப்பாளர் எம்.எச்.எம். ஜாபிர் தெரிவித்தார். கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான வகுப்பறை அழகுபடுத்தல் போட்டி பரிசளிப்பு விழா இன்று (17) காலை பாடசாலை வளாகத்தில் பாடசாலை அதிபர் ஏ.ஜி.எம். றிசாத் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வகுப்புகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இன்று பரிசு பெற்ற வகுப்புகளை மனமார வாழ்த்துகிறேன். அதேவேளை, இந்த முறை வெற்றி பெறாத மாணவர்களும் மனம் தளராமல், அடுத்த சந்தர்ப்பத்தில் மேலும் சிறப்பாக செயல்பட வேண்டும். போட்டியின் உண்மையான வெற்றி பரிசைப் பெறுவதில் அல்ல; நல்ல பழக்கவழக்கங்களையும் ஒற்றுமையையும் வளர்த்துக் கொள்வதில்தான் இருக்கிறது. நமது பாடசாலைகள் அறிவு வழங்கும் இடங்களாக மட்டுமன்றி, சிறந்த பண்புகளைக் கொண்ட நல்ல குடிமக்களை உருவாக்கும் மையங்களாகவும் திகழ வேண்டும். அதற்காக மாணவர்கள் அனைவரும் தமது வகுப்பறையையும் பாடசாலைச் சூழலையும் எப்போதும் தூய்மையாகவும் அழகாகவும் பேண வேண்டும். இந்த அழகிய நிகழ்வை ஏற்பாடு செய்த அதிபர், ஆசிரியர்கள், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பங்களிப்பு வழங்கிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டு, அனைத்து மாணவர்களுக்கும் அவர்களின் எதிர்கால கல்வி வாழ்வில் எல்லா வெற்றிகளும் கிட்ட வாழ்த்துகிறேன் என்றார். இந்நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளரும், காரைதீவு கோட்டக்கல்வி பணிப்பாளருமான ஏ. சஞ்சீவன் கௌரவ அதிதியாகவும், ஆசிரிய ஆலோசகர் எம்.எம். சியாம், கல்விப்பணிமனைக்கான பாடசாலை இணைப்பாளர் வி. தையூப், ஆசிரிய ஆலோசகர் ஐ.எம். மவ்சூர் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர். மாணவர்களிடையே சுத்தம், ஒழுங்கு, பொறுப்புணர்வு, படைப்பாற்றல் மற்றும் கற்றலுக்கு ஏற்ற வகுப்பறைச் சூழலை உருவாக்கும் நோக்கில் நடத்தப்பட்ட வகுப்பறை அழகுபடுத்தல் போட்டியில் வெற்றி பெற்ற வகுப்புகளுக்கு இந்நிகழ்வில் பரிசுகளும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. முதலிடத்தை தரம் 10 பெற்றுக்கொண்டதுடன் இரண்டாம் இடத்தை தரம் 11ம் மூன்றாம் இடத்தை தரம் 06ம் பெற்றுக்கொண்டது. நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்புப் பொறுப்புகளை எம்.சி. ஹிஜாஸ் மற்றும் ஏ.ஆர். பைரூஸ் கான் ஆகியோர் திறம்பட மேற்கொண்டிருந்தனர்.

No comments

Subscribe Us