Column Left

Vettri

Breaking News

வேளாண்மைத் துறையை ஜனாதிபதி பொறுப்பேற்க வேண்டும் என உள்ளூர் விவசாயிகள் அமைப்பின் கோரிக்கை!!




நுவரெலியாவில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் வேளாண்மைத் துறையுடன் தொடர்புடைய அதிகாரிகளை கடுமையாக விமர்சித்த உள்ளூர் விவசாயிகளின் குரல் (தேசிய கோவி ஹட) அமைப்பு, வேளாண்மைத் துறையில் ஆழ்ந்த அறிவும் அனுபவமும் கொண்டதாக தாங்கள் நம்பும் ஜனாதிபதி நேரடியாக வேளாண்மை அமைச்சை பொறுப்பேற்க வேண்டும் என மரியாதையுடன் கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டின் பொருளாதாரத்திற்கு வலுசேர்க்கும் அதேவேளை பாரம்பரிய உணவுக் கலாசாரத்தை பாதுகாத்து வரும் விவசாயிகள் தொடர்ந்து அவமதிக்கப்படுவதும் கேலிக்குள்ளாக்கப்படுவதும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும். எனவே வேளாண்மைத் துறையுடன் தொடர்புடைய பொறுப்பதிகாரிகள் உடனடியாக பதவிகளில் இருந்து நீக்கப்பட்டு, வேளாண்மை அமைச்சின் பொறுப்பு ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது. வேளாண்மைத் துறையைப் பற்றிய போதிய அறிவில்லாத நிர்வாகிகளின் குறுகிய நோக்குடைய தீர்மானங்களால் விவசாய பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதியின் கவனத்தை ஈர்ப்பதற்காக கடந்த 12ஆம் திகதி நுவரெலியாவில் இந்த விசேட ஊடகச் சந்திப்பு நடத்தப்பட்டது. இச்சந்திப்பில் தேசிய கோவி ஹட அமைப்பின் தலைவர் தரிந்து ரத்நாயக்க, நுவரெலியா இளைஞர் விவசாயிகள் சங்கத்தின் செயலாளர் ஹசித வீரசிங்க மற்றும் அமைப்பின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கடுமையாகக் கண்டித்த அவர், தொடர்ந்து விவசாயிகளை அவமதிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால், விவசாயிகள் போராட்டத்திற்கு தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நுவரெலியா இளைஞர் விவசாயிகள் சங்கத்தின் செயலாளர் ஹசித வீரசிங்க, அரசியல் கட்சிகள் தேர்தல் காலங்களில் வாக்குகளைப் பெறும் நோக்கில் மட்டுமே விவசாயிகளைப் போற்றுவதாகவும், விவசாயிகளுக்கு அரசர்களாக மாற வேண்டிய எந்தவித விருப்பமும் இல்லை என்றும் கூறினார். மேலும் கருத்து வெளியிட்ட அவர், உலகின் பல முன்னேறிய நாடுகளில் நவீன விவசாயி என்பது தொழில்நுட்ப ரீதியாக முன்னேறிய தொழில்முனைவோராகக் கருதப்படுகிறார் என்றும், ஒவ்வொரு நாட்டிலும் விவசாயி ஒரு தொழில்முனைவோராக மதிக்கப்படுகின்ற நிலையில், இலங்கையில் தற்போதைய அரசாங்கமே விவசாயிகளை கேலிக்குரியவர்களாக மாற்றியுள்ளதாகவும் தெரிவித்தார். இன்று "விவசாயியே ராஜா" என்ற கருத்தை கேலி செய்பவர்கள், தேர்தல் மேடைகளில் அதே கோஷத்தை எழுப்பியவர்களே என்றும், அவ்வாறான பேச்சுகள் தற்போது நகைப்புக்குரியதாகிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். தாங்கள் கோருவது "விவசாயியை ராஜாவாக்க வேண்டும்" என்ற வெறும் அரசியல் கோஷமல்ல; மாறாக விவசாயியை உண்மையான தொழில்முனைவோராக உருவாக்கும் தேசிய கொள்கைகள் வகுக்கப்பட வேண்டிய காலம் இது என்றும் அவர் தெரிவித்தார். அரசாங்கம் இதுகுறித்து போதிய கவனம் செலுத்தாத போதிலும், விவசாய அமைப்புகள் ஒன்றிணைந்து விவசாய உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கான நடைமுறைகளை உருவாக்கும் பணியில் தற்போது ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார். அவ்வாறான முயற்சிகளில் ஈடுபட்டு வரும் நிலையில் கூட அரசாங்கம் தொடர்ந்து கேலிக்குரிய கருத்துக்களை வெளியிட்டால், அது விவசாயிகளை அவமதிக்கும் செயல் மட்டுமன்றி அவர்களின் கண்ணியத்தையும் பாதிக்கும் செயலாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். எனவே, தற்போதைய ஜனாதிபதி இப்பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்கி, வேளாண்மை அமைச்சை நேரடியாக தனது பொறுப்பின் கீழ் கொண்டு வந்து, நாட்டின் வேளாண்மைத் துறைக்கான தெளிவான கொள்கைகளை வகுக்கும் பொறுப்பை ஏற்க வேண்டும் என மரியாதையுடன் கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments

Subscribe Us