Column Left

Vettri

Breaking News

பொத்துவிலில் தீவிர டெங்கு ஒழிப்பு நடவடிக்கை! *பாடசாலைகள் மற்றும் பொது இடங்களில் விசேட சோதனை*




 பொத்துவிலில் தீவிர டெங்கு ஒழிப்பு நடவடிக்கை! *பாடசாலைகள் மற்றும் பொது இடங்களில் விசேட சோதனை* 


நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தின் மூன்றாம் நாள் (18) நடவடிக்கையாக, பொத்துவில் பிரதேசத்தில் பொது இடங்களில் விசேட டெங்கு பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.


பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் உவைஸ் பாறுக் அவர்களின் வழிகாட்டலில் இடம்பெற்ற இந்த விசேட நடவடிக்கையின் போது, டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களை அடையாளம் காண்பதில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.


இதன்போது பொத்துவில் பிரதேசத்திலுள்ள பாடசாலைகளின் சுற்றுச்சூழல், கிணறுகள், மலசலகூடங்கள், திண்மக்கழிவு முகாமைத்துவப் பகுதிகள் மற்றும் பிரதான வடிகால்கள் என்பன சுகாதார அதிகாரிகளால் உன்னிப்பாகப் பரிசோதிக்கப்பட்டன. நுளம்புக் குடம்பிகள் காணப்பட்ட இடங்கள் அடையாளம் காணப்பட்டு அவை முற்றாக அழிக்கப்பட்டன.


மேலும், இப்பிரதேச பொதுமக்களுக்கு டெங்கு நோயின் தாக்கம் மற்றும் அதிலிருந்து தற்காத்துக்கொள்ளும் முறைகள் குறித்த விழிப்புணர்வுப் பிரசாரங்களும் இதன்போது முன்னெடுக்கப்பட்டன. இந்தச் சோதனை நடவடிக்கையில் பொது சுகாதார பரிசோதகர்கள், சுகாதார உத்தியோகத்தர்கள் மற்றும் களப் பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு தமது பங்களிப்பினை வழங்கினர்.


டெங்கு நுளம்புகள் பரவுவதைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் தமது சுற்றுச்சூழலைத் தொடர்ச்சியாகச் சுத்தமாக வைத்திருக்குமாறும், தேங்கி நிற்கும் நீரினை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறும் சுகாதார அதிகாரிகள் பாடசாலை அதிபர்கள் மற்றும் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டனர்.

No comments