காத்தான்குடி படுகொலைக்கு தமிழர்களும், சத்துருக்கொண்டான் படுகொலைக்கு முஸ்லிம்களும் வெட்கப்பட வேண்டும்! பத்மநாபா அறிவியல் கழக ஸ்தாபகர் ஜோதி காட்டம்!
( வி.ரி.சகாதேவராஜா)
உலகத்தில் விடுதலை அமைப்பால் மத நிறுவனம் ஒன்றில் ஏதுமறியா மக்கள் கொல்லப்பட்டது காத்தான்குடியில் தான். தமிழன் என்று வகையிலே நான் வெட்கப்படுகின்றேன். அதேபோல், சத்துருக்கொண்டான் படுகொலையை முஸ்லிம் ஊர்காவல் படையினர் ஏகாதிபத்திய ஏவலில் செய்தார்கள்.அந்த வகையில் முஸ்லிம்களும் வெட்கப்பட வேண்டும்.
இவ்வாறு கொக்கட்டிச்சோலை பத்மநாபா அறிவியல் கழகத்தின் ஸ்தாபகர் தோழர் ஜோதி( பிரான்ஸ் ) காட்டமாக கூறினார்.
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் பத்மநாபா உள்ளிட்ட தியாகிகளின் 36 வது நினைவு தின நினைவேந்தல் நிகழ்வு நேற்று (27) சனிக்கிழமை மகிழடித்தீவு கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்ற பொழுது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் .
அங்கே பிரதம அதிதியாக ஏ. திரேசகுமாரன் கலந்து சிறப்பித்தார்
தோழர் ஜோதி அங்கு மேலும் தெரிவிக்கையில்..
சமகால அரசு ஜேவிபி சிந்தனை கொள்கை உடையது. இருந்த பொழுதிலும் இலங்கையில் மதவாதமற்ற இனவாதமற்ற ஊழலற்ற அரசாங்கத்தை ஏற்படுத்த போகிறோம் என்று சொல்வதை வரவேற்கின்றோம்.
மூவினங்களும் வாழ்கின்ற கிழக்கு மாகாணத்திலே ஒற்றுமை இல்லா விட்டால் எந்த இனமும் நிம்மதியாக வாழ முடியாது .
இங்கு மதவாதத்தை தலை தூக்க இடம் அளித்தால் நிச்சயம் தோல்வியில் முடிவடையும்.
காரணம் அமெரிக்க ஏகாதிபத்தியம் என்று கூற முடியாது. இங்கிலாந்து என்றொரு நாடு இருக்கின்றது. படுமோசமான நாடு.அங்கிருந்துதான் அமெரிக்காவிலும் அவுஸ்திரேலியாவிலும் பலர் இருக்கிறார்கள்.
அவர்கள் தான் இங்கு தேசிய இனங்களிடையே பிரிவினை ஏற்படுத்த பார்ப்பார்கள். முடியாவிட்டால் மதம் முரண்பாடுகளை தோற்றுவிப்பார்கள்.
எனவே தான் இலங்கையில் எதிர்காலத்தில் மதம் முரண்பாடுகளை தோற்றுவிப்பதற்கான அடித்தளம் இடப்படுகின்றதோ என்று சிந்திக்க வேண்டியிருக்கிறது .
ஆகவே கிழக்கில் வாழ்கின்ற மூன்று இனங்களும் குந்தி இருந்து பேச வேண்டும்.
எதிர்கால சந்ததி நிம்மதியாக வாழ வேண்டுமாக இருந்தால் எம்மிடையே முரண்பாடுகள் குறிப்பாக மத முரண்பாடுகளை உருவாகக்கூடாது.
தேசியம் பேசுவோர் இங்கு எதுவுமே செய்யப்போவதில்லை. என்றார்.
அங்கு ஈபிஆர்எல்எவ் ஸ்தாபக தலைவர் நாபா தோழருக்கும் ஏனைய தியாகிகளுக்கும் மலர் தூவிநினைவஞ்சலி செலுத்தப்பட்டதோடு, கல்வியை ஊக்குவிக்க நோக்கில் பலதரப்பட்ட வேலைத்திட்டங்களை பல கோடி ரூபாய் செலவில் முன்னெடுத்திருகின்றார்கள் .அதற்கான உதவிகள் மேடையிலேயே வழங்கப்பட்டன.
No comments