Column Left

Vettri

Breaking News

ஆரோக்கிய வாழ்வு மையங்களின் சேவைகளை மேம்படுத்த சுகாதார உத்தியோகத்தர்களுக்கு பயிற்சி!!




நூருல் ஹுதா உமர் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் இயங்கிவரும் 29 ஆரோக்கிய வாழ்வு மையங்களின் (Healthy Lifestyle Centers) சேவைகளை மேம்படுத்தி, அவற்றின் தரத்தை உயர்த்தும் நோக்கில் சுகாதார உத்தியோகத்தர்களுக்கான புத்துணர்ச்சி பயிற்சி செயலமர்வு அண்மையில் நடைபெற்றது. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸதீன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் பேரில் ஏற்பாடு செய்யப்பட்ட இச்செயலமர்வு, பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்றது. பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.பி. மசூத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வை, பிராந்திய தொற்றா நோய் தடுப்புப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எஸ்.எம். பௌசாத் ஒருங்கிணைத்திருந்தார். இச்செயலமர்வில் ஆரோக்கிய வாழ்வு மையங்களில் கடமையாற்றும் வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், பொதுச் சுகாதார மருத்துவ மாதுக்கள், சுகாதார உதவியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். இதன்போது ஆரோக்கிய வாழ்வு மையங்களின் செயல்திறனை மேலும் உயர்த்துவது, பொதுமக்களின் பங்களிப்பை அதிகரிப்பது, சுகாதார சேவைகளின் அணுகலை விரிவுபடுத்துவது மற்றும் பொதுமக்களுக்கு தரமான சுகாதார சேவைகளை வழங்குவதற்கான நடைமுறைகள் குறித்து விரிவாக விளக்கமளிக்கப்பட்டது. மேலும், தொற்றா நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவித்தல் மற்றும் சமூக மட்டத்தில் சுகாதார விழிப்புணர்வை வலுப்படுத்துதல் போன்ற விடயங்களும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரோக்கிய வாழ்வு மையங்களின் சேவைகளை மக்கள் மத்தியில் மேலும் பயனுள்ளதாக்கும் நோக்கில் இத்தகைய பயிற்சி நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments