மோகன் கணேஷ் ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்தது வீரமுனை போனிக்ஸ்!
மோகன் கணேஷ் ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்தது வீரமுனை போனிக்ஸ்!
காரைதீவு ஜொலிகிங்ஸ் விளையாட்டு கழகத்தின் 19வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, காலஞ்சென்ற மோகன் கணேஷ் அவர்களின் ஞாபகார்த்தமாக நடத்தப்பட்ட மென்பந்து சுற்றுப்போட்டித் தொடரின் இறுதி நிகழ்வு, இன்று பிற்பகல் 3:30 மணியளவில் காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரி மைதானத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
கழகத்தின் தலைவர் திரு. தனுசியன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில், மொத்தம் 32 அணிகள் பங்கேற்றுத் தமது திறமைகளை வெளிப்படுத்தின. விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில், வீரமுனை போனிக்ஸ் விளையாட்டு கழகமும், அக்கரைப்பற்று ஜோலி பாய்ஸ் விளையாட்டு கழகமும் மோதிக்கொண்டன.
இப்போட்டியின் முடிவில், வீரமுனை போனிக்ஸ் விளையாட்டு கழகம் வெற்றி பெற்று சம்பியன் பட்டத்தைத் தமதாக்கிக் கொண்டது. அத்துடன், இச்சுற்றுப்போட்டியில் காரைதீவு விளையாட்டு கழகம் மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
வெற்றி பெற்ற அணிகளுக்குப் பெறுமதி வாய்ந்த வெற்றி கிண்ணங்களும், ரொக்கப் பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டன. இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக ஓய்வுநிலை நில அளவையாளர் Lion. திரு. S. நேசராசா, ஓய்வுநிலை பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திரு. S. விவேகானந்தராசா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். கௌரவ அதிதிகளாக அம்பாறை ஹார்டி கல்லூரியின் வணிகத்துறைத் தலைவர் திரு. மு. ரமணிதரன்,மற்றும் புள்ளிவிபர உத்தியோகத்தர் திரு. மு. வரதராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.
இச்சுற்றுப்போட்டியின் இறுதி நிகழ்வின் போது கழகத்தின் கல்வி சாதனையாளர்களான செல்வன். ஜெயநிதி மிருசன், செல்வன். கீர்த்திசீலன் டனுஜன், செல்வன். பவாநந்தன் கிருத்தீபன், செல்வன். கணேசமூர்த்தி சஹானுஜன் ஆகியோர் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் 2026 காரைதீவு பிரதேச மட்ட விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற கழக வீரர்களும் இதன்போது விசேடமாக கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
No comments