கிழக்கில் உதயமான மாற்றுத் திறனாளிகளுக்கான தொழிற் பயிற்சி நிலையம் !
கிழக்கில் உதயமான மாற்றுத் திறனாளிகளுக்கான தொழிற் பயிற்சி நிலையம் !
இலங்கையில் மொத்த சனத்தொகையில் 7.8% மாற்றுத் திறனாளிகளாகளாக அதாவது விசேட தேவையுள்ளவர்களாக இருக்கின்றனர்.
அவர்கள் இன்னொரன்ன அசௌகரியங்களை சமுதாயத்தில் எதிர்நோக்கி வருகின்றனர்.
அப்படிப்பட்டவர்களை 90 வீதமான பெற்றோர்கள் சமுதாயத்திற்கு வெளிக்காட்டாமல் வீட்டுக்குள் முடக்கி வைத்துள்ளனர்.
உண்மையில் அவர்கள் முடக்கி வைக்கப்பட வேண்டியவர்கள் அல்ல .
அவர்களும் பல திறமைகளோடு சாதிக்க பிறந்தவர்கள் தான்.
உலகில் ஸ்டீபன் ஹோல்டிங் போன்ற மிகவும் புகழ்பெற்ற மனிதர்கள் இருக்கிறார்கள்.
அவர்கள் இன்றும் வாழ்க்கைக்கு நம்பிக்கை ஊட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.
வாழ்க்கை என்பது போராட்டம். இது இவர்களுக்கு மாத்திரம் அல்ல அது அனைவருக்கும் தான்.
அந்த அடிப்படையிலே நம்பிக்கை என்கின்ற விதையை விதைக்கின்ற கைங்கரியத்தை ஏனையோர் இவர்களிடத்திலேயே விதைக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையானது அனுதாபங்கள் அல்ல.
மாறாக உங்களது அன்பு பாசம் என்பதற்கு அப்பால் அவர்களுக்கான அந்தஸ்து வழிகாட்டல்கள் அவசியம் தேவை அவர்களும் மனிதர்களே.
அவர்களும் வாழப்பிறந்தவர்களே. என்ற வீதியிலே அவர்களுக்கு சொந்த காலில் நிற்பதற்காக பல வேலைத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டியது அவசியமாக இருக்கின்றது.
அந்த அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில்
"ஒளிரும் கரங்கள்" Raising Hands நிறுவனத்தினால் மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற் பயிற்சி நிலையம் ஒன்று கடந்த (10) செவ்வாய்க்கிழமை கிழக்கு மாகாணத்தில் கல்முனையில் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டிருக்கின்றது .
அடுத்த நிலையம் வெகு விரைவில் வாகரையில் திறந்து வைக்கப்படவிருக்கிறது.
ஒளிரும் கரங்கள் (Raising Hands)அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் விசேட தேவையுள்ள பிள்ளை நல அமைப்பின்(Disabled child care) தலைவருமான ரி. இளையராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே. அதிசயராஜ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிலையத்தை திறந்து வைத்தார்.
தேசிய பயிலுனர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின்( NAITA) அம்பாறை மாவட்ட பணிப்பாளர் மொகான் அபேசுந்தர, மாவட்ட பரிசோதகர் கே .செல்வபிரகாஷ், விவேகானந்த தொழில்நுட்பக் கல்லூரியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கே. பிரதீஸ்வரன், ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் வித்தகர் வி.ரி.சகாதேவராஜா உள்ளிட்ட பல பிரமுகர்கள் மதகுருமார்கள் கலந்து சிறப்பித்தார்கள்.
தற்போது இப் பயிற்சி நிலையத்தில் அம்பாறை மாவட்டத்தின் பெரியநீலாவணை தொடக்கம் பொத்துவில் வரையிலான பிரதேசங்களில் இருந்து 30 மாற்றுத் திறனாளிகள் இணைந்துள்ளனர்.
அவர்களுக்கு கைத்தறி பயிற்சி, அலைபேசி திருத்தம் பயிற்சி , சிரட்டை அலங்கார பொருட்கள் தயாரிப்பு பயிற்சி போன்ற பயிற்சி நெறிகள் கொடுப்பனவுடன் வழங்கப்பட இருக்கின்றன.
இவர்களுக்கு நய்ட்டா ( NAITA) நிறுவனம் மாதா மாதம் ஒவ்வொரு பயிலுனருக்கும் 7500 ரூபாவை நன்கொடையாக வழங்குகின்றது.
இவர்களுக்கு இதேபோன்று மேலும் பல உதவிகள் வழங்கப்பட இருக்கின்றன.
இந்த நிறுவனத்தில் இணைந்து பயிற்சி பெற மேலும் மாற்றுத் திறனாளிகளை ஒளிரும் கரங்கள் அமைப்பு எதிர்பார்க்கின்றது.
கலந்து கொண்ட மாற்றுத் திறனாளிகளுக்கு டெப்லிங் ( Deaflink)ஸ்தாபகர் வண.ஜி.ஜி.ஞானராஜா, மட்டக்களப்பு லடர் ஆப் ஹோப் ( Ladder of hope) பொதுமுகாமையாளர் செல்வி எஸ் .ஆர். மதிதரன் ஆகியோர் அன்பளிப்புகளை வழங்கி வைத்தார்கள்.
எனவே மாற்றுத் திறனாளிகள் சமுதாயத்தில் ஏனையோர் போல் வாழ அனைவரும் உதவிக் கரம் நீட்ட வேண்டும்.
வித்தகர் விபுலமாமணி
வி.ரி. சகாதேவராஜா
No comments