Column Left

Vettri

Breaking News

கல்விச் சீர்திருத்த விடயத்தில் அரசாங்கம்  சர்ச்சைகளுக்கு முடிவு கட்டவேண்டும் - வுமென்ஸ் கோர்ப்ஸ் அமைப்பின் தலைவி




கல்விச் சீர்திருத்த விடயத்தில் அரசாங்கம் சர்ச்சைகளுக்கு முடிவு கட்டவேண்டும் - வுமென்ஸ் கோர்ப்ஸ் அமைப்பின் தலைவி பாறுக் ஷிஹான் கல்விச் சீர்திருத்த விடயத்தில் அரசாங்கம் சர்ச்சைகளுக்கு முடிவு கட்டவேண்டும் என வுமென்ஸ் கோர்ப்ஸ் (பெண்கள் படையணி ) அமைப்பின் தலைவி றிகாஸா ஷர்பீன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சாய்ந்தமருது எம்.எஸ். காரியப்பர் பாலர் பாடசாலையின் வருடாந்த பட்டமளிப்பு மற்றும் பரிசளிப்பு விழா பாலர் பாடசாலையின் பொறுப்பாசிரியர்களான ஏ.எம்.அஸ்மினா, எம்.எம்.பர்வீன் ஆகியோரின் நெறிப்படுத்தலில் அதன் அதிபர் எம்.எஸ்.எம் ஆரிப் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (04) சாய்ந்தமருது கலாச்சார மத்திய நிலையத்தில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்படி வேண்டுகோளினை றிகாஸா ஷர்பீன் விடுத்துள்ளார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், கல்விச் சீர்திருத்தம் என்ற பெயரில் கல்வி அமைச்சின் புதிய பாடத்திட்டத் தொகுதிகள் தொடர்பாக எழுந்துள்ள விமர்சனம் மற்றும் பாலியல் கல்வி பற்றிய சர்ச்சை என்பன இன்று பெரும் பூதாகரமாக மாறியுள்ளது. இதற்கு எதிராக நாட்டின் பெண்கள் அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள் என்பன தங்களது கடும் எதிர்ப்பை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றது. எனவே இந்த சர்ச்சைகளுக்கு உடன் முடிவு கட்ட அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம். கல்வி என்பது ஒரு மனிதனின் வாழ்க்கையை ஒளியூட்டும் தீபம் என்றால், அந்த தீபம் முதன்முதலில் ஏற்றப்படுவது பாலர் பாடசாலையில்தான். என் அன்புச் செல்வங்களான பிள்ளைகளே, இன்று நீங்கள் பெறும் இந்தப் பட்டங்களும் பரிசுகளும் உங்கள் சிறு வயதிலேயே நீங்கள் எடுத்த முதல் வெற்றிப்படிகளாகும் இன்றைய நிகழ்வில் இடம்பெறும் விளையாட்டு, பாடல், நடனம், ஓவியம், எழுத்து இவையெல்லாம் உங்கள் அறிவையும் திறமையையும் வளர்க்கும் வழிகளாகும். அன்பிற்குரிய பெற்றோர்களே, பிள்ளைகளின் முதல் ஆசிரியர்கள் நீங்கள்தான். புத்தகங்களைவிட உங்கள் நடத்தையும், வார்த்தைகளும், பொறுமையும் பிள்ளைகளுக்கு பெரும் பாடமாக அமைகின்றன. மதிப்பெண்களைவிட மதிப்பீடுகள், போட்டியைவிட ஒத்துழைப்பு, வெற்றியைவிட நல்ல மனிதராக உருவாகுதல் என்பதற்கு முக்கியத்துவம் வழங்குங்கள். பிள்ளைகளின் திறமைகளை ஒப்பீடு செய்யாமல், அவரவர் தனித்தன்மையை ஊக்குவியுங்கள். மதிப்புக்குறிய ஆசிரியர்களே, பாலர் கல்வி என்பது அடித்தளத்தை அமைக்கும் மிக முக்கியமான கட்டமாகும். உங்கள் பொறுமையும் அர்ப்பணிப்பும் தான் எதிர்கால சமூகத்தை வடிவமைக்கிறது. உங்களின் சேவை என்றும் போற்றுதலுக்குரியது. எம்.எஸ்.காரியப்பர் பாலர் பாடசாலையின் கல்விச் சேவையினை சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் பெரும்பாலும் குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களின் பிள்ளைகளே பெற்று வருகின்றனர். இந்த மாணவர்களுக்கு ஆரம்பக் கல்வியை மிகவும் அர்ப்பணிப்புடன் வழங்கி வரும் எம்.எஸ்.காரியப்பர் பாலர் பாடசாலையின் பொறுப்பாசிரியை ஏ.எம்.அஸ்மினா மற்றும் ஆசிரியை எம்.எம்.பர்வீன் ஆகியோரை பாராட்டுகின்றேன். இன்று இவ்வளவு மகிழ்ச்சியும் பெருமையும் நிறைந்த இந்தப் எம்.எஸ்.காரியப்பர் பாலர் பாடசாலை வருடாந்த பட்டமளிப்பு மற்றும் பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். என்னை பிரதம அதிதியாக இந்நிகழ்வுக்கு அழைத்தமைக்கு பாலர் பாடசாலை நிர்வாகத்திற்கு நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.

No comments