Column Left

Vettri

Breaking News

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 2026 புத்தாண்டு கடமை ஆரம்ப நிகழ்வு




தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 2026 புத்தாண்டு கடமை ஆரம்ப நிகழ்வு பாறுக் ஷிஹான் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 2026 ஆம் ஆண்டின் முதல் நாள் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் 34/2025 ஆம் இலக்க விசேட சுற்றறிக்கைக்கு அமைவாக, “வளமான நாடு – அழகான வாழ்க்கை” எனும் தேசிய தொனிப்பொருளின் கீழ், 2026 01.01 ஆம் திகதி நடைபெற்றது. இந்த நிகழ்வு, உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ். எம். ஜுனைடீன் தலைமையில், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஏ.ஆர். மன்சூர ஞாபகார்த்த பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. பதில் பதிவாளர் எம். ஐ. நௌபரின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில், பீடாதிபதிகள், திணைக்களத் தலைவர்கள், பேராசிரியர்கள், நூலகர், பல்கலைக்கழக பொறியியலாளர், பிரதம பாதுகாப்பு அதிகாரி, சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட விரிவுரையாளர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள் மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர். நிகழ்வின் ஆரம்பத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்டது. தொடர்ந்து, நாட்டிற்காக உயிர் நீத்தவர்களை நினைவுகூரும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் பின்னர், அனைத்து உத்தியோகத்தர்களும் இணைந்து அரச சேவை உறுதியுரை / சத்தியப்பிரமாணத்தை சத்தமாக வாசித்து சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர். சத்தியப்பிரமாண நிகழ்வை பதில் பதிவாளர் எம். ஐ. நௌபர் தமிழில் பொறியியல் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எம்.ஏ.எல். அப்துல் ஹலீம் சிங்களத்திலும் முன்னெடுத்தனர். இங்கு உரையாற்றிய உபவேந்தர் பேராசிரியர் எஸ். எம். ஜுனைடீன், அரசாங்கத்தின் விசேட சுற்றறிக்கைக்கு அமைவாக, இந்த ஆண்டின் தொனிப்பொருளை முன்னிறுத்தி, அனைவரும் அர்ப்பணிப்புடனும் பொறுப்புடனும் கடமைகளை ஆரம்பிக்க வேண்டிய அவசியத்தை அவர் வலியுறுத்தினார். தொடர்ந்து உரையாற்றிய அவர், நாட்டின் தற்போதைய பொருளாதார, சமூக மற்றும் நிர்வாக சவால்களை சுட்டிக்காட்டி, அவற்றை எதிர்கொள்ள அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள பல்வேறு அபிவிருத்தி மற்றும் மறுசீரமைப்பு முயற்சிகள் குறித்து எடுத்துக்கூறினார். அரசாங்கத்தின் திட்டங்கள் வெற்றியடைய, பொது சேவையாளர்களின் அர்ப்பணிப்பு, தொழில்முறை ஒழுக்கம் மற்றும் பொறுப்புணர்வு மிக முக்கியம் எனவும் தெரிவித்தார். தேசிய பல்கலைக்கழகமாகிய தென்கிழக்குப் பல்கலைக்கழகம், திறமையான மற்றும் பொறுப்புள்ள பட்டதாரிகளை உருவாக்குதல், ஆய்வு மற்றும் அறிவு வளர்ச்சியின் மூலம் நாட்டின் அபிவிருத்திக்கு பங்களித்தல், சமூக ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துதல் என்பன போன்ற முக்கிய பொறுப்புகளை ஏந்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அரசாங்கக் கொள்கைகளை கல்வி, ஆராய்ச்சி, தொழில்துறை மற்றும் சமூக சேவை வழியாக நடைமுறைப்படுத்துவதில் பல்கலைக்கழக ஊழியர்களின் பங்கு அத்தியாவசியமானது என்றும் அவர் தெரிவித்தார். கடந்த ஆண்டு நாட்டில் ஏற்பட்ட நீண்ட மின்தடை, வெள்ளப்பெருக்கு, தகவல் தொடர்பு சீர்கேடுகள் போன்ற கடினமான சூழ்நிலைகளுக்கிடையிலும், பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளும் அத்தியாவசிய சேவைகளும் இடையூறு இன்றி முன்னெடுக்கப்பட்டதை உபவேந்தர் நினைவுகூர்ந்தார். இது பணியாளர்களின் ஒற்றுமை, அர்ப்பணிப்பு மற்றும் பொறுப்புணர்வின் சிறந்த எடுத்துக்காட்டு என அவர் பாராட்டினார். அரசாங்கத்தின் திட்டங்கள் ஒரு கட்டமைப்பை வழங்கினாலும், அவற்றின் உண்மையான வெற்றியை தீர்மானிப்பது ஒழுக்கம், நேர்த்தி, நேரம் கடைபிடித்தல், நேர்மை மற்றும் கடமை உணர்வு என்பவற்றே என உபவேந்தர் வலியுறுத்தினார். தேசிய முன்னுரிமைகளுடன் பல்கலைக்கழக நடவடிக்கைகளை ஒத்திசைத்து, மாணவர்களை ஆதரித்து, செயல்திறனை மேம்படுத்துவதன் மூலம் நாட்டின் மீட்சி மற்றும் அபிவிருத்திக்கு நேரடி பங்களிப்பு செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்தார். உரையின் இறுதியில், “பல்கலைக்கழகத்தை மேலும் வலுப்படுத்தி, அரசாங்கத்தின் இலக்குகளை ஆதரித்து, சமூகத்திற்கு பயனளிக்கும் வகையில் ஒன்றிணைந்து செயல்படுவோம்” என அழைப்பு விடுத்த உபவேந்தர், அனைவருக்கும் ஒழுக்கமிக்க, பயனுள்ள மற்றும் அர்த்தமுள்ள 2026 ஆம் ஆண்டு அமைய வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

No comments