Column Left

Vettri

Breaking News

ஜனாதிபதி அனுரகுமாரதிஸாநாயக்காவின் நத்தார் வாழ்த்துச் செய்தி!!




 உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவ பக்தர்கள் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை பக்தியுடன் கொண்டாடும் உன்னதமான நத்தார் (கிறிஸ்துமஸ்) திருநாள் இன்றைய தினம் (25) உதயமாகியுள்ளது.

இலங்கையர்களாகிய நாம், இம்முறை நத்தார் பண்டிகையை ஒரு தேசமாக மிகவும் வேதனைமிக்க இயற்கை அனர்த்தத்திற்கு முகங்கொடுத்து, அதிலிருந்து மீண்டு எழுவதற்கு உறுதியுடன் முயற்சிக்கும் ஒரு தீர்மானமிக்க தருணத்தில் கொண்டாடுகிறோம் என்பதை நாம் அறிவோம்.

அன்பு, அமைதி, மகிழ்ச்சி, பகிர்தல் மற்றும் தியாகம் ஆகியவையே நத்தர் பண்டிகையின் உண்மையான அர்த்தங்களாகும். பாதிக்கப்பட்டவர்களுக்கு சகோதரத்துவ உணர்வுடன் உதவுவதும், ஒட்டுமொத்த மனிதகுலத்தின் விமோசனத்திற்காக அர்ப்பணிப்புடன் செயல்படுவதும் இதில் முதன்மையானது.

கிறிஸ்தவ மதத்தைப் போலவே அனைத்து மதங்களும் போதிப்பது என்னவென்றால், அண்டை வீட்டார் ஆபத்தில் இருக்கும்போது அவர்களைக் கைவிடாமல் சகோதரத்துவத்துடன் அணைத்துக்கொள்ளும் உன்னதமான மனிதாபிமான பண்பாகும். அந்த அசைக்க முடியாத உறுதியை கடந்த கால அனர்த்தங்களின் போது இந்நாட்டு மக்கள் மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளனர்.

தமது சகோதர மக்களுக்காக, தாங்கள் ஒருபோதும் செல்வோம் என்று எதிர்பார்க்காத பாதைகளில் அத்தியாவசியப் பொருட்களைச் சுமந்து கொண்டு மக்கள் சென்றனர். அண்டை வீட்டாரை நேசிக்கும், அமைதி மற்றும் ஒற்றுமை நிலவும், தியாகம் மற்றும் சகவாழ்வு கொண்ட ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்ப அழைப்பு விடுக்கும் உன்னத நத்தாரின் உண்மையான அர்த்தத்தை அவர்கள் இதன் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர் என்று நான் நம்புகிறேன்.

இருளை விரட்ட வேண்டுமானால், ஒளியின் பிரகாசத்தைப் பரப்ப வேண்டும்.

பெத்லகேமின் ஏழ்மையான மாட்டுத் தொழுவத்தில் பிறந்து, மனித சமூகத்தைப் பாவங்களிலிருந்து விடுவிப்பதற்காக கல்வாரி மலை உச்சியில் சிலுவையில் அறையப்பட்டுத் தன்னைத் தியாகம் செய்த இயேசு கிறிஸ்து, தனது மன உறுதி, நம்பிக்கை மற்றும் ஞானத்தின் மகிமையால் மரணத்தை வென்று உயிர்த்தெழுந்தார் என்று கிறிஸ்தவ தர்மத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யதார்த்தமான வேதனைமிக்க உண்மைகளை எதிர்கொண்டு, சவால்களை வென்று ஒரு நாடாக ஒன்றிணைந்து எழுவோம் என்று உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றேன். உதயமாகியுள்ள இந்த உன்னதமான நத்தர் திருநாள் அமைதி, மகிழ்ச்சி நிறைந்ததாகவும், கருணையை முன்னிறுத்தி மனிதாபிமானத்தை ஒளிர்விக்கச் செய்யும் சுப நத்தர் தினமாகவும் அமையட்டும் எனப் பிரார்த்திக்கின்றேன்.

No comments