Column Left

Vettri

Breaking News

நத்தார் ‘பிறரை நேசித்தல்’ எனும் உன்னத தர்மத்தை உலகிற்கு எடுத்துக் காட்டியுள்ளது!!




 டிசம்பர் மாதம் பிறந்தவுடனேயே கிறிஸ்தவ பக்தர்கள் உன்னதமான நத்தார் (கிறிஸ்துமஸ்) பண்டிகையைக் கொண்டாடத் தயாராகிறார்கள். அமைதியின் செய்தியுடன் பாலன் இயேசு பிறந்த செய்தி பெத்லகேம் நகரிலிருந்து உலகிற்கு அறிவிக்கப்பட்ட அந்த நத்தாரை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது கிறிஸ்தவர்களின் அபிலாஷையாகும்.

இருப்பினும், இம்முறை குளிர்ந்த டிசம்பர் மாதம் வழக்கமான மகிழ்ச்சியுடனோ அல்லது உற்சாகத்துடனோ பிறக்கவில்லை. ஒட்டுமொத்த நாட்டையும் அதிரவைத்த இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான எமது சகோதர மக்களின் துயரம் மற்றும் பெருமூச்சுகளுக்கு மத்தியிலேயே இது பிறந்துள்ளது.

ஆயினும், நத்தாரின் உண்மையான அர்த்தத்தை முன்னிறுத்தி, இயேசு கிறிஸ்துவின் வழிகாட்டல்களுக்கு அமைய, எமது நாட்டு மக்கள் அனைத்து வேறுபாடுகளையும் மறந்து ஒற்றுமையுடனும் கூட்டுப்பொறுப்புடனும் பாதிக்கப்பட்ட தமது சகோதர மக்களுக்காக முன்வந்தனர். இது அன்பு, சகவாழ்வு மற்றும் இயேசு போதித்த ‘பிறரை நேசித்தல்’ எனும் உன்னத தர்மத்தை உலகிற்கு எடுத்துக் காட்டியுள்ளது.

நாட்டை வழமைக்குக் கொண்டுவருவதற்காக அனைத்து மக்களும் ஒரே நோக்கத்துடனும், கூட்டுப் பொறுப்புடனும் தேசத்தின் எதிர்காலத்திற்காக ஒன்றிணைய வேண்டிய தருணத்திற்கு நாம் இப்போது வந்துள்ளோம்.

உண்மையான மாற்றத்தை எதிர்பார்த்த இலட்சக்கணக்கான மக்களின் எதிர்பார்ப்புகள் எந்த வகையிலும் சிதைந்துவிட இடமளிக்காது, அவர்கள் எதிர்பார்க்கும் “புதியதோர் நாட்டை” கட்டியெழுப்பும் ஒரே நோக்கத்திற்காக நாம் தொடர்ச்சியாக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.

சிறந்ததொரு நாளை நோக்கிய எமது அனைவரினதும் கனவு நனவாக, பிரஜைகளாக ஒன்றிணைந்து, அன்பு, சகவாழ்வு மற்றும் பொறுப்புணர்வுடன் செயற்பட இந்த நத்தார் தினத்தில் நாம் அனைவரும் உறுதியேற்போம்.

இலங்கை வாழ் மற்றும் உலக வாழ் அனைத்து கிறிஸ்தவ பக்தர்களுக்கும் எனது இனிய நத்தார்  தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

No comments