கல்வித்துறையில் எழுந்துள்ள பல பிரச்சினைகள் குறித்து ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டணியுடன் பிரதமர் கலந்துரையாடல்!!
கல்வித்துறையில் எழுந்துள்ள பல பிரச்சினைகள் குறித்து விவாதிக்க கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டணி இடையே இன்று (22) இசுருபாய வளாகத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது.
2026 ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட உள்ள புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு இணங்க பாடசாலை நேரத்தை 30 நிமிடங்கள் நீட்டிப்பதால் ஏற்படும் பிரச்சினைகளை தொழிற்சங்க உறுப்பினர்கள் பிரதமரிடம் முன்வைத்தனர்.
அவ்வேளை கருத்து தெரிவித்த பிரதமர், கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் மாற்றங்களுக்கு அமைய, தேசிய கல்வி நிறுவனம் (NIE), கல்வி ஆணைக்குழு மற்றும் கல்வி அமைச்சு ஆகியன இணைந்து எடுத்த கூட்டுத் தீர்மானமே இதுவென குறிப்பிட்டுள்ளார்.
புதிய சீர்திருத்த செயல்முறையின்படி வகுப்பறையில் மேற்கொள்ளப்படும் மதிப்பீட்டு முறையில், ஆசிரியர் மதிப்பீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மாணவர்கள் கல்வி மற்றும் நடைமுறை நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ளவும், ஒரு பாடவேளையை 50 நிமிடங்கள் வரை நீடிக்க வேண்டியுள்ளதாக பிரதமர் விளக்கமளித்தார்.
எவ்வாறாயினும், தொழிற்சங்கங்கள் முன்வைத்த ஆலோசனைகள் குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
இந்தக் கலந்துரையாடலின் போது, சமீபத்திய இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட பள்ளிகளின் புனரமைப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது, மேலும் ஏற்கனவே கல்வி நடவடிக்கைகளைத் தொடங்க முடியாத நிலையில் உள்ள பள்ளிகளை விரைவாக மீட்டெடுப்பதற்கும், அந்தப் பகுதிகளில் கல்வி நடவடிக்கைகளை இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
No comments