Column Left

Vettri

Breaking News

உள்ளாற்றுக்கட்டு பாலத்தில் தவறி விழுந்த குடும்பஸ்தரின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு!!




 நீரில் மூழ்கிய குடும்பஸ்தரின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு


பாறுக் ஷிஹான்


விவசாய நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில்  ஓடும்  நீரில்  தவறி விழுந்து மூழ்கிய   குடும்பஸ்தரின் சடலம் மரண விசாரணையின் பின்னர்  உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  உள்ளாற்றுக்கட்டு பகுதியில் விவசாய நடவடிக்கைக்காக சென்ற நிலையில் அப்பகுதியில் உள்ள பாலத்தில் இருந்து   தவறி விழுந்து விவசாயியான  குடும்பஸ்தர்  உயிரிழந்த நிலையில் சடலமாக வியாழக்கிழமை(25)  மீட்கப்பட்டிருந்தார்.

இவ்வாறு உயிரிழந்தவர் துவிச்சக்கர வண்டியில்  பசளை ஏற்றிக் கொண்டு  வயலுக்குச் செல்லும் வழியில்  பாலத்தின் ஊடாக பயணித்த போது தவறுதலாக ஆற்றில் பசளை விழுந்ததாகவும் அதனை மீட்டெடுக்க  அதிக நீரோட்டம் (வெள்ளம்) கொண்ட ஆற்றிற்குள் இறங்கிய நிலையில்  அவர்  நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது என எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் தெரிவித்தார்.

மேலும் குறித்த உள்ளாற்றுக்கட்டு பகுதியில் வான்கதவின் ஊடாக வெள்ள நீர் வெளியேறி வருகின்ற நிலையில் சடலமானது கலிங்கத்தொட்டியில் சிக்கி காணப்பட்டதை அவதானிக்க முடிந்தது.நீரில் மூழ்கி காணாமல் போன உயிரிழந்தவரின் சடலத்தை தேடுவதற்கு அப்பகுதிக்கு நீர்பாசன திணைக்களத்தின் உதவி பெறப்பட்டிருந்தது.அத்துடன் அப்பகுதிக்கு வருகை தந்த நீர்பாச திணைக்களத்தினர் வான்கதவுகளை மூடி வெள்ள நீரை குறைத்த போது   கலிங்கத்தொட்டியில் சிக்கி   சடலம் உயிரிழந்த நிலையில்  மீட்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

குறித்த உயிரிழந்தவரின்  மரணம் தொடர்பில் சம்மாந்துறை பதில் நீதிமன்ற நீதிவானின் உத்தரவிற்கமைய  திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எச்.அல் ஜவாஹீர் முன்னெடுத்ததுடன்   நீரில் மூழ்கியமையினால் மூச்சு திணரல் ஏற்பட்டு  மரணம் சம்பவித்துள்ளதாக குறிப்பிட்டு  சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது..

 உயிரிழந்தவர் நிந்தவூர் 06 தெற்கு வீதி பகுதியில் வசித்து வந்த 63 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான இஸ்மாலெப்பை இப்றாகீம் என்பவராவார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments