Column Left

Vettri

Breaking News

பேரனர்த்த காலத்தில் எதிர்க்கட்சிகள் என்ன செய்ய வேண்டும்'? பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் இவ்வாறு சொல்கிறார்!




பேரனர்த்த காலத்தில் எதிர்க்கட்சிகள் என்ன செய்ய வேண்டும்'? பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் இவ்வாறு சொல்கிறார்! நாடு இன்று எதிர் நோக்கி இருக்கின்ற பேரனர்த்த வேளையில் எதிர்க்கட்சிகள் எவ்வாறு செயல்பட வேண்டும்? பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்? அரசாங்கம் என்ன செய்ய வேண்டும்? என்பது தொடர்பாக இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதிக் கல்விப் பணிப்பாளருமான ஞானமுத்து ஸ்ரீ நேசன் வழங்கிய விசேட செவ்வி இது.. அனர்த்த வேளையில் அவர் வழங்கிய செவ்வி இதோ வாசகர்களுக்காக... கேள்வி: இன்றைய பேரனர்த்த காலத்தில் எதிர்க்கட்சிகள் செய்ய வேண்டியது என்ன? பதில்: இந்த நேரத்தில் பேரிடரால் ஏற்பட்ட இழப்புகளை வைத்துக்கொண்டு நாங்கள் எந்த விதத்திலும் அரசியல் செய்வதை தவிர்த்து, விமர்சனங்கள் செய்வதை குறைத்து ,மக்களுக்கு நாங்கள் ஆற்றவேண்டிய மனிதாபிமான பணிகளை செய்ய வேண்டும் .அந்த வகையில் அவரவர் பிரதேசத்துக்கு சென்று மக்களை சந்திப்பது. அவர்களுடைய தேவைகளை அறிவது. முடிந்தவற்றை அவர்களுக்கு நிறைவேற்றுவது. முடியாதவற்றை அரசின் கவனத்திற்கும் மற்றும் அவர்களுக்கு உதவக் கூடிய நிறுவனங்களின் கவனத்திற்கு கொண்டு செல்வதும் தலையாய கடமையாகும் . மாணவர்கள் கல்வி கற்பதற்கான வாய்ப்புகளுக்கு உதவி செய்தல் அதேபோன்று மன ஆறுதலை ஏற்படுத்தக் கூடிய விதத்தில் மக்களுக்கு ஆறுதல் கூறுதல். அதேவேளை வெளிநாட்டு தொடர்புள்ளவர்கள் வெளிநாட்டின் நிறுவனங்களிடமிருந்து உதவிகளை பெற்று இந்த மக்களுக்கு மோசடிகள் இல்லாமல் வழங்குதல் போன்ற செயற்பாடுகளை செய்யலாம். அதேவேளை அரசின் நல்ல செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில் எந்த தவறும் இருக்க முடியாது. கே: அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் பற்றி என்ன கூற விரும்புகின்றீர்கள்? ப: உண்மையில் மண் சரிவு வெள்ளப்பெருக்கு சூறாவளி என்பவற்றால் எமது மக்கள் காவு கொள்ளப்பட்டிருக்கின்றார்கள் . 602 பொதுமக்கள் மரணித்திருக்கின்றார்கள் .அதேபோல 368 மக்கள் காணாமல் போயிருக்கின்றார்கள். இந்த நிலையில் மரணித்த எமது மக்களுக்காகவும் காணாமல் போன மக்களுக்காகவும் நாங்கள் வேதனை அடைகின்றோம். துயரத்தை பதிவு செய்கின்றோம். அவர்கள் மரணித்து இருந்தால் அவர்களது ஆத்மா சாந்தியடைய வேண்டும். அவர்களுக்கான அஞ்சலியை செலுத்திக் கொள்ளுகின்றோம். குறிப்பாக மலையக மக்கள் மண் சரிவினால் பல தடவைகள் மோசமான நிலையில் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் .மரணத்திற்கு உள்ளாகி இருக்கின்றார்கள். கே.இதனை தடுக்க தவிர்க்க ஏதும் வழிகள் உள்ளனவா? ப.உண்மையில் மண் சரிவை தடுப்பது என்பது கடினமான ஒரு விடயம். அதேவேளை மண் சரிவால் மரணமடையும் பகுதிகளில் மக்கள் வாழாமல் அவர்களை அதிலிருந்து வெளியேற்றி பாதுகாப்பான நிலங்களில் வீடுகளை அமைத்துக் கொடுப்பதன் மூலமாக மண் சரிவுக்குள்ளாகி மரணிப்பதை தடுத்துக் கொள்ளலாம் . மனித உயிர் மிக முக்கியமானது .அந்த உயிரை பாதுகாப்பதற்கு பயங்கரமான பாதுகாப்பற்ற மண் சரிவு இடம்பெறும் இடங்களில் மக்கள் வாழாமல் பாதுகாப்பான இடங்களை அவர்களுக்கு தேர்ந்தெடுத்து அதில் வீடுகளை அமைத்துக் கொடுக்க வேண்டியது அரசின் தார்மீக கடமையாகும் . கே.நீங்கள் ஒரு கல்வியியலாளர். அரசாங்கம் எதிர்காலத்தில் அனர்த்தங்களை எவ்வாறு முகாமை செய்யலாம் ? ப. வெள்ளப்பெருக்கை தடுப்பதற்கு சில உத்திகளை கையாள வேண்டும் .வீதிகளை அமைத்தால் மட்டும் போதாது. வடிகான்களையும் ஒழுங்காக அமைக்க வேண்டும் .அதேபோல இயற்கை தோணாக்களாக காணப்படுகின்ற அந்த வடிகால்கள் தூர்வாரப்பட வேண்டும். அதாவது அங்குள்ள அடைப்புகள் அல்லது கூழங்கள் அகற்றப்பட்டு தூய்மையாக்கப்பட வேண்டும். கே. அனர்த்தம் இடம் பெற்றால் என்ன செய்ய வேண்டும் என்று கருதுகின்றீர்கள்? ப. உண்மையில் அடிப்படடைத்தேவைகளான உணவு உடை உறையுள் என்பன முதலில் கொடுக்கப்பட வேண்டும். குழந்தைகள் பெண்கள் வயோதிகர்கள் விசேடமாக கவனிக்கப்பட வேண்டிய வர்க்கத்தினர். அவர்களது நோய்களை தடுப்பதற்கு ஏற்ற விதத்தில் தேவையான இடத்தில் சேவைகள் வழங்கப்பட வேண்டும் . இதைவிட உறவுகளின் இழப்புகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கைடர் அன்ட் கவுன்சிலிங் என்று சொல்லுவார்கள். அதாவது ஆற்றுப்படுத்துகை வழிகாட்டல் அவசியமாக இருக்கின்றது. அதனையும் செய்ய வேண்டும். அவர்களுடைய வாழ்வாதாரத்தை கட்டி எழுப்புவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் .அடிப்படை வசதிகள் வருமான வசதிகளையும் அவர்களுக்கு செய்து கொடுக்க வேண்டும். இவை எல்லாம் அவர்களுக்கு உடனடியாக செய்து கொடுக்க வேண்டிய தேவைகளாக சேவைகளாக இருக்கின்றன. கே. தங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் நீர்நிலை பயணங்கள் ஆபத்தாக உள்ளதே? ப. ஆம். மட்டக்களப்பு மாவட்டத்தில் நீர்நிலைப் பயணங்களால் அல்லது படகுப்பாதை பயணங்களால் தோணிகளில் அல்லது படகுகளில் பயணிப்பதால் ஏற்படக்கூடிய விபரீதங்கள் அதிகரித்து வருகிறது என அவை உண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தமட்டில் ஆறுகள் படுவான்கரையையும் எழுவான்கரையையும் இணைக்கும் பல நீர்நிலைகளில் இப் பயணம் ஆபத்தாக இருக்கிறது. இரு நிலப் பகுதிகளுக்கு இடைப்பட்ட ஆறுகள் இருக்கின்றன. இவற்றை கடப்பதற்கு நீர்நிலை பயணங்கள் நடைபெறுவதால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. அதேவேளை இப் பயணங்களை சீராக செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. எனவே இது ஆபத்தான பயணங்களாக இருக்கின்றபடியால் இவற்றுக்கு பாலங்களை அமைத்து அனர்த்த காலங்களிலும் மக்கள் தங்களது உயிர்களை பாதுகாத்துக் கொள்வதற்கு வழிசெய்வதோடு போக்குவரத்தையும் இலகு படுத்தி உதவ வேண்டும். அதேவேளை பொருளாதார பணிகளை செம்மையாக செய்வதற்கும் இப்படியான பாலங்கள் அமைக்கப்பட வேண்டும். உயிரை காப்பதற்கு கூட பாலங்கள் உதவுகின்றன . கே. கிழக்கு மாகாணத்தில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான காரணம் என்ன? அதனை எவ்வாறு தவிர்க்கலாம் ? ப. அவ்வாறான இடங்களில் வீடுகளை அமைத்திருப்பதும் வடிகால்கள் அமைக்கப்படாமல் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கின்றது. இதைவிட பாலங்கள் அமைப்பது என்று சொல்லிவிட்டு அணைக்கட்டுகளை கட்டி விடுவதால் விடுவதாலும் அந்த அணைக்கட்டுகளுக்கு ஊடாக வெள்ள காலங்களில் நீர் பாய்ந்து செல்ல முடியாமல் இருக்கின்றது. உதாரணமாக மட்டக்களப்பை எடுத்துக் கொண்டால் கிரான் பாலம் என்பது அணைக்கட்டாகவே இருக்கின்றது .ஒரு சிறிய பகுதிதான் பாலமாக இருக்கின்றது. பழைய கல்லடிப்பாலம் கூட அணைக்கட்டாகத்தான் இருக்கின்றது .அதற்காக அமைத்துக் கொண்டிருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது . பாலம் போல் செல்லக்கூடிய விதத்தில் அந்த பாலங்கள் அமைக்கப்பட வேண்டும் .நான் சொல்லுகின்ற மண்முனைப் பாலம் கூட நீர் தேங்கி நிற்பதை காணக்கூடியதாக இருக்கின்றத உள்ள. அந்த பாலங்கள் சரியாக அமைக்கப்பட வேண்டும் என்பதே என்னுடைய கருத்தாக இருக்கின்றது. கே. இறுதியாக ஒரு கேள்வி. அனர்த்த முகாமைத்துவ செயற்பாடுகள் மீளக் கட்டியெழுப்பும் இன்றைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் நம்பிக்கை அளிக்கிறதா? ப. நல்ல செயற்பாடுகளுக்கு நாம் என்றும் ஆதரவு ஒத்துழைப்பு வழங்குவோம். அந்த வகையில் தற்போது இந்த அனர்த்தத்திற்கு பின்னரான காலத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்பாடுகளை வரவேற்கிறோம். பிழை நடந்தால் தட்டிக் கேட்போம். செவ்வி கண்டவர் ; வித்தகர் விபுலமாமணி வி.ரி. சகாதேவராஜா காரைதீவு நிருபர்

No comments