மலையக மக்களை வடக்கில் குடியேற்ற வேண்டும்-கிழக்கில் அவர்களுக்கு இடமில்லை-ஊடகப் பேச்சாளர் முபாறக் முப்தி
மலையக மக்களை வடக்கில் குடியேற்ற வேண்டும்-கிழக்கில் அவர்களுக்கு இடமில்லை-ஊடகப் பேச்சாளர் முபாறக் முப்தி
டித்வா புயலில் பூனைக்கும் எலிக்கும் திருமணம் நடைபெற்றுள்ளதை காண்கின்றோம்
மலையக மக்களது வாழ்வாதாரம் முக்கியமானதா அல்லது தேயிலை தோட்டங்கள் முக்கியமானதா என்பதை அரசாங்கம் சிந்தித்து செயலாற்ற வேண்டும்
பாறுக் ஷிஹான்
மலையக மக்களது வாழ்வாதாரம் முக்கியமானதா அல்லது தேயிலை தோட்டங்கள் முக்கியமானதா என்பதை அரசாங்கம் சிந்தித்து செயலாற்ற வேண்டும் என ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பேச்சாளர் முபாறக் முப்தி தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம் கல்முனையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் தலைமை காரியாலயத்தில் இன்று விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது
பாமர மக்களின் பிரச்சினைகள் தெரிந்த ஜனாதிபதியாக அனுர இருக்கின்றார்.அண்மைக்காலத்தில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக பூனைக்கும் எலிக்கும் திருமணம் நடைபெற்றுள்ளதை காண்கின்றோம்.முஸ்லீம் கட்சிகள் ஒற்றுமைப்பட வேண்டும் என்பதில் எம்மில் மாற்றுக்கருத்து எதுவும் இல்லை.ஏன் ஒற்றுமை பட வேண்டும் எனின் சமூகத்தை ஏமாற்றுவதற்கு அல்ல.சமூகத்தின் பிரச்சினைகளை அரசியல் மயப்படுத்தி தீர்வு காண்பதற்காக வேண்டும் என்பதற்காகவே முஸ்லீம் கட்சிகள் ஒன்றுபட வேண்டுமே தவிர சாதாரணமாக நிகழ்வு ஒன்றில் ஒற்றுமையாவது என்பதை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது.
கடந்த 20 வருடங்களுக்கு மேலாக அதாவுல்லாஹ் ரவூப் ஹக்கீம் என்பவரை எதிர்த்தே அரசியல் செய்து வந்தார்.இதனால் அதாவுல்லாஹ்வுடன் பல ஊரை சேர்ந்தவர்கள் இணைந்திருந்தனர்.இதை விட அதாவுல்லாஹ் தான் கல்முனை சாய்ந்தமருது ஊர்களை பிரிக்கின்றார் போன்ற குற்றச்சாட்டுக்களும் வெளிவந்தன.அது மாத்திரமன்றி அட்டாளைச்சேனை அக்கரைப்பற்று ஊர்களையும் அதாவுல்லாஹ் தான் பிரிக்கின்றார் என்ற மற்றுமொரு குற்றச்சாட்டும் எழுந்தன.அது போன்று தான் தற்போது அதாவுல்லாஹ் ரவூப் ஹக்கீம் இணைவு என்பது சமூகத்திற்கானது அல்ல என்பதே எமது கருத்தாகும்.
அது மாத்திரமல்ல இவ்வாறான அனர்த்தங்களில் ஒற்றுமை என கூறி ரவூப் ஹக்கீம், அதாவுல்லாஹ் ,ஹிஸ்புல்லாஹ், போன்றோர் படம் காட்டுகின்றார்கள்.எனவே தான் பதவிகளால் எமது சமூகத்திற்கு எதவித நன்மைகளும் கிடைக்கப்போவதில்லை.முஸ்லீம் கட்சிகள் தற்போது வாக்குகள் குறைந்த வங்குரோத்து கட்சிகளாக வலம் வருகின்றன.இதற்கு காரணம் தேசிய மக்கள் கட்சியின் செல்வாக்கும் ஜனாதிபதி அனுரவின் செயற்பாடுகளுமாகும்.இதற்கு உதாரணமாக கல்முனை தேர்தல் தொகுதியில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டு ஜனாதிபதி அனுரவின் கட்சி வெற்றி பெற்றதனை கூற முடியும்.
இது வரலாற்றில் பெரும் நிகழ்வாகும்.2004 ஆண்டு இம்மாவட்டம் சுனாமியினால் பாதிக்கப்பட்ட போது இம்மாவட்ட மக்களுக்கு ரவூப் ஹக்கீம் என்பவர் எந்த உதவியையும் செய்யவில்லை.அத்துடன் மலையக மக்களை வட கிழக்கில் குடியேற்ற வேண்டும் என கூறப்படுவது ஏற்கக்கூடிய வாதம் அல்ல.வேண்டும் என்றால் வட மாகாணத்தில் மாத்திரம் சுமந்திரன் மனோ கணேசன் கூறுவது போன்று குடியேற்றலாம்.தேயிலை தோட்ட வேலைகளுக்காக தான் இந்தியாவில் இருந்து மலையக மக்களை இலங்கைக்கு அழைத்து வந்தார்கள்.எனவே தான் அரசாங்கம் அம் மக்களின் வாழ்வாதாரம் முக்கியமானதா அல்லது தேயிலை தோட்டங்கள் முக்கியமானதா என்பதை அரசாங்கம் சிந்தித்து செயலாற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.
இவ்விசேட செய்தியாளர் சந்திப்பில் ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் தலைவர் முஸ்னத் முபாறக், செயலாளர் எம்.எம். இர்பான் ,உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
No comments