நங்கூரமிட்டு அலேர்ட் அடித்தோம்; யாரும் வரவில்லை! பாரிய அலைகள் வேகமாக தாக்கி கரையில ஒதுக்கியது!! திகில் அனுபவம் பற்றி உயிர் தப்பிய மீனவர் சசி கருத்து
(சவுக்கடியிலிருந்து வி.ரி. சகாதேவராஜா)
நேரம் நள்ளிரவு ஒரு மணி இருக்கும் .காற்று பலமாக வீசியது. அலைகள் ஓங்கி அடித்தன. செய்வதறியாது நங்கூரத்தை இறக்கி விட்டு அலேட்(Alert )(எச்சரிக்கை ஒலியை) அடித்தோம். யாரும் உதவ வருவார்கள் என்று நம்பி இருந்தோம் .ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. சற்று நேரத்தில் பாரிய அலைகள் உயர்ந்துவந்து படகினை இரண்டையும் உடைத்தது. நாங்கள் இயந்திரத்தை இயக்கியும் நகர முடியவில்லை . அலைகள் கரையை நோக்கி தள்ளியது. நாங்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பினோம்.
இவ்வாறு ஏறாவூர் சவுக்கடியில் நேற்று முன்தினம் இரவு விபத்துக்குள்ளான காரைதீவு ஆழ்கடல் இயந்திரப் படகில் பயணம் செய்து கோர திகில் அனுபவத்துடன் தெய்வாதீனமாக உயிர் தப்பிய மீனவர் எஸ். சசிகுமார் தெரிவித்தார்
அவர் மேலும் தெரிவிக்கையில்..
காரைதீவிலிருந்து வாழைச்சேனை நோக்கி எமது பழுதடைந்த படகினை எடுத்துச் செல்லும் பொழுது இவ் விபத்து ஏற்பட்டது.
கரையோரம் நெருங்க நாங்கள் துள்ளி குதித்து கரையை அடைந்தோம். அப்போது சவுக்கடி மீனவர்கள் எமக்கு பூரணமாக உதவினார்கள் என்றார் .
இரண்டு படகுகளின் உரிமையாளரான கே.ஜெயசிறில் தெரிவிக்கையில் ..
மாரி காலமாதலால் வழமையாக வாழைச்சேனை படகு துறைமுகத்தில் படகுகளை கட்டுவது வழக்கம். ஆதலால்
எனது படகுகள் இரண்டும் வாழைச்சேனை நோக்கி சென்று கொண்டிருந்தன.
14 ஆம் தேதி நள்ளிரவு 1.39 மணியிருக்கும். காரைதீவில் எனது வீட்டில் ஆழ்ந்த நித்திரையில் இருந்தபொழுது திடீரென்று சவுக்கடி மீனவர்களின் தொலைபேசி என்னை எழுப்பியது .
உடனடியாக காரை எடுத்துக்கொண்டு ஏறாவூர் சவுக்கடிக்கு வந்தேன். இரண்டு படங்களும் பாரிய சேதத்துடன் கரையிலே தள்ளாடிக் கொண்டிருந்தன.ஐந்து பேரில் நாலு பேர் தப்பினர் படகோட்டி ஜெயக்கொடி காயத்துடன் ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் .
இப்படி கடலில் செல்கின்ற பொழுது அலேட் சைரன் ஒலியை அடித்தும் யாரும் உதவவில்லை என்றால் எதற்காக இது ?
சுமார் இரண்டு கோடி ருபாய் நஷ்டம் ஏற்படும்.இதுவரைக்கும் அரசு அதிகாரிகள் யாரும் வந்து பார்க்கவில்லை .இந்த சவுக்கடி மீனவர்கள் சங்க மீனவர்கள் மற்றும் பொதுமக்களே வந்து இவ்வளவு நேரமும் எங்களுக்கு பூரண உதவியை நல்கிக் கொண்டிருக்கிறார்கள் .
சவுக்கடி மீனவர்கள் சங்க தலைவர் எஸ். ஆனந்தன் தெரிவிக்கையில் ..
15 ஆம் தேதி நள்ளிரவு 1.30 மணி இருக்கும்.
இரண்டு படகுகள் கரை ஒதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்று பார்த்தவுடன் நிலைமை மோசமாக இருந்தது. உடனடியாக போலீசுக்கு அறிவித்துவிட்டு எமது மீனவர்களை அழைத்து ஆக வேண்டியதை பார்த்தோம். காயமடைந்த படகோட்டி மீனவரை ஆஸ்பத்திரி கொண்டு சென்ற ஒப்படைத்தேன். இப்போது உரிமையாளருடன் மீட்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றோம் என்றார்.



No comments