Column Left

Vettri

Breaking News

கல்முனை தமிழர் பிரதேசங்களில் மீண்டும் காணி அபகரிப்பா? நகரத்தில் நரகமாக இருக்கிறது கல்முனை தமிழர் பிரதேசம்? ஊடகச் சந்திப்பில் சமூக செயற்பாட்டாளர்கள் ஆவேசம் !




 ( வி.ரி.சகாதேவராஜா)


கல்முனை வடக்கு தமிழர் பிரதேசங்களில்  மீண்டும் காணி ஆக்கிரமிப்பு தொடர்கிறதா? இனமதபேதமற்ற அரசாங்கம் எனக் கூறும் அனுர அரசு இத்தகைய சட்டவிரோத இனவாத காணி ஆக்கிரமிப்பை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் .

இவ்வாறு கல்முனையில்  இன்று (6) நடைபெற்ற சிறப்பு ஊடகச் சந்திப்பில் சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

கல்முனை இலங்கை வங்கி சந்தியில் மேற்குபுறமாகவுள்ள வீதியோரத்தில் சுதேச உணவு வழங்கும் கடைத்தொகுதி கட்டுவதற்கு, தனியாரும் கல்முனை தெற்கு பிரதேச செயலக அரச அலுவலர்களும் வந்து கட்டுமான பணிகளை மேற்கொள்ள வந்த சம்பவத்தை அடுத்து இந்த பதட்டநிலை தோன்றியுள்ளதாக கூறப்படுகிறது.

 இதனையடுத்து, கல்முனை ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற இச் சிறப்பு ஊடகச் சந்திப்பில் 
பிரபல சமூக செயற்பாட்டாளர்களான முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன், தா. பிரதீபன் , மாதர் சங்கத் தலைவி திருமதி எஸ். நித்தியகைலேஸ்வரி ஆகியோர் ஊடகங்களுக்கு ஆக்ரோஷமாக விளக்கம் அளித்தனர்.
 
இது பற்றி சமூக செயற்பாட்டாளர் சந்திரசேகரம் ராஜன் விளக்கம் அளிக்கையில்..

கல்முனை வடக்கு எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் இவ்வாறு  கட்டுமான பணியை மேற்கொள்வதாயின் முதலில் பிரதேச செயலாளரிடம் அனுமதி பெறப்பட்டதா?
இல்லை.

முதலில் ஒருவர் வந்தார் .30 வருட காணி உரிமை இருக்கின்றது என்றார் . எங்கே என்று கேட்டவுடன் திரும்பி போய்விட்டார்.
 பின்பு கல்முனை முஸ்லிம் பிரதேச செயலக அதிகாரிகள் வந்தார்கள் . கடை கட்ட எங்களுக்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை அனுமதி இருக்கிறது என்றார்கள். நான் உடனடியாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளரை  சந்தித்தேன்.  கட்டுமானத்துக்கு அல்ல கண்டைனர் வைத்து தொழில் செய்வதற்கு அனுமதி வழங்கி இருக்கின்றோம் என்றார்.
அண்மையில் வீரமுனையில் வீதிக்கு சொந்தமான இடத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத் தீர்மானம் எடுக்கப்பட்டும்,  ஒரு பெயர்ப் பலகையைக் கூட நாட்ட முடியாத இந்த வீதி அபிவிருத்தி அதிகாரசபை இன்று இதற்கு அனுமதி வழங்கி இருக்கிறதாம்.
அங்காடிக் கடைகளை  வைக்கக்கூடாது பெட்டிக்கடைகளை  வைக்க கூடாது என்று எழுப்பி வருகின்ற நிலையில் இந்த இடத்தில் இந்த வியாபாரத்தை நடத்துவதற்கு அனுமதி வழங்கி இருக்கின்றதா?

 இந்த வீதி அபிவிருத்தி அதிகாரசபை பொறியியலாளர்கள் மற்றும் மாகாண பணிப்பாளர் இனரீதியாக செயல்படுகின்றார்களா? அல்லது வேண்டும்  என்றே தமிழ்மக்களை புறக்கணிக்கின்றார்களா? இனமதவாதமற்ற அனுர அரசிடம் இவர்களது இனவாத போக்கை முன்வைத்து நீதிமன்றங்களுக்கு செல்ல இருக்கிறோம்.

இது ஒரு நீரேந்து பகுதி என்பது சகல இன மக்களுக்கும் தெரியும் .
 இதனை தடுத்தால் கடந்த காலங்களை போல் மீண்டும் வெள்ளம் அந்த பிரதேசம் எல்லாம் நிரம்பும்.

 ஆகவே இச் செயற்பாட்டை உடனடியாக நிறுத்த வேண்டும்.

கல்முனையில் உள்ள சந்தாங்கேணி மைதானம் நானறிந்த வகையில் குளமாகத்தான் இருந்தது .இன்று அது மைதானமாக மாறி இருக்கின்றது .

கல்முனை தமிழர் பிரதேசம் நகரத்தில் நரகமாக இருக்கிறது. ஒழுங்கான வீதிகள் இல்லை. மின்விளக்குகள் இல்லை. அதைக் கேட்பாரும் இல்லை பார்ப்பாரும் இல்லை.

விரைவில் தேர்தல் வருகிறது .
அதற்காக இந்த இனவாத செயற்பாட்டை முன்னெடுக்கின்றார்கள் .
ஆகவே இதற்கு தமிழ் முஸ்லிம் சிங்கள மக்கள் இதற்குப்பின்னால் சிக்கூவிடக் கூடாது.
எனவே மக்கள் விரும்பாத இந்த கட்டுமானப்பணியை உடனடியாக நிறுத்தவேண்டும் என்றார்.

மற்றும் ஒரு சமூக செயற்பாட்டாளர் தா. பிரதீபன் கூறுகையில்..

 கல்முனையில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நீரேந்து பகுதியில் இவ்விதம் உரிய அங்கீகாரம் அனுமதி பெறப்படாமல் கட்டுமான பணியை முன்னெடுக்க  முயல்வது இங்குள்ள அமைதியை குழப்பும் செயல் ஆகும்.

இது தேவையற்ற ஒன்று .
இது அரசியல் திட்டமாக இருந்தால் இதற்கு  எப்பொழுது ரென்டர்  போல் பண்ணினார்கள்? யாருக்கு ரென்டர் வழங்கினார்கள்? ஏன் இந்த அரச உத்தியோகத்தர்கள் விடுமுறை நாட்களில் இங்கு வர வேண்டும்? என்ற கேள்வி எல்லாம் எழும்புகின்றது .

ஏலவே  இந்த இடத்தில் நாவிதன்வெளி பிராந்தியமக்கள்  பயன்படுத்துவதற்காக பஸ் தரிப்பிடம் ஒன்றை  அமைக்க முற்பட்டபோது 
நீர்ப்பாசன திணைக்களம் அதற்கு அனுமதி மறுத்தது. காரணம் இங்கு ஏதாவது கட்டுமானம் இருந்தால் நீர் வழிந்தோடுவது
தடுக்கப்பட்டு இப்பகுதி எல்லாம் வெள்ளமாகும் என்றார்கள். அது உண்மைதான்  

ஆனால் அதே நீர்ப்பாசன திணைக்களம் இன்று எவ்வாறு  இந்த கடைத் தொகுதிக்கு அனுமதி வழங்கியது ?
என்று கேட்கின்றோம்

இந்த நில ஆக்கிரமிப்பு தொடர்பாக உரிய அரச அதிகாரிகளுக்கு முறைப்பாடு செய்தோம். ஆனால் இதுவரை யாரும் வந்து பார்க்கவில்லை. ஏலவே வாடி வீட்டுப் பகுதியில் மண் நிரப்பப்பட்டது. கடற்கரையில் தோணாப்பகுதி நிரப்பபட்டது.   இவற்றையெல்லாம் நாம் தடுத்தோம் . பாண்டிருப்பு எல்லையில்  முஸ்லிம் அரச உயரதிகாரி ஒருவர் நில ஆக்கிரமிப்பு செய்ய முற்பட்டார். எடுத்தோம்.

ஆனால் இன்று மீண்டும் புது வடிவில் இது நகருக்குள் வருகிறது. இதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றார்.

மாதர் சங்கத் தலைவி திருமதி நித்யா கூறுகையில்...

கல்முனை தமிழ் பிரதேசம் தொடர்ச்சியாக நில ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருவதை உலகறியும்.. பல தடவைகளில் நாங்கள் முன் நின்று தடை செய்திருந்தோம் .

இது பற்றி பொலீஸ் நிலையம் நீர்ப்பாசனத் திணைக்களம் வீதி அபிவிருத்தி அதிகாரசபை போன்ற அரச நிறுவனங்களுக்கு முறையான அறிவிப்பு முறைப்பாடுகளை கொடுத்தும் யாருமே வந்து பார்க்கின்றார்கள் இல்லை .
எனவே இந்த அபகரிப்புக்கு அவர்கள் துணை போகின்றார்களா? என்று கேட்கிறோம்.

 இந்த இடத்தில் இப்படியான சுதேச உணவு விற்கும் கடை வைப்பதானால் அதற்கு எமது கல்முனை வடக்கு பிரதேச செயலாளர். மற்றும் கிராம சேவையாளர் பாராளுமன்ற உறுப்பினரிடம்  சொன்னார்களா?

கல்முனை தமிழ் மக்கள் சொல்லொணா கஷ்டப்படுகின்றார்கள். பலவித அடக்குமுறைகள் பாரபட்சம் புறக்கணிப்புகளுக்கு தொடர்ச்சியாக உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள்.

இதற்கெல்லாம் காரணம் ஆதம்பாவா எம்.பிதான் என்று அறிகிறோம்.
எது எப்படி இருப்பினும் நாங்கள் உயிர் போகும் வரை இதனை விட மாட்டோம் என்றார்.



No comments