Column Left

Vettri

Breaking News

தமிழ்மொழிக்கு சம அந்தஸ்த்து வழங்குவதாக சுற்றுநிருபத்தில் கூறப்பட்டிருந்தும் கூட செயற்பாட்டில் இல்லை!!




 வி.சுகிர்தகுமார் 

 தமிழ்மொழிக்கு சம அந்தஸ்த்து வழங்குவதாக சுற்றுநிருபத்தில் கூறப்பட்டிருந்தும் கூட செயற்பாட்டில் இல்லை என இலங்கை ஜனநாயக முன்னணியின் தலைவர் அல்ஹாஜ் A.B. கமால்தீன் தெரிவித்தார்.

தற்போது பதவியில் இருக்கும் அரசாங்கம் நாட்டில் பிறந்த சகல மக்களும் சம அந்தஸ்த்து உடையவர்கள். எல்லா பிரதேசங்களிலும் அபிவிருத்தி செய்யப்படல் வேண்டும். அடிப்படை உரிமைகள் எவருக்கும் மறுக்கப்படல் கூடாது என அடிக்கடி கூறுகின்றது. அப்படி கூறியும் ஏன் தமிழ் மொழிக்கு உரிய அந்தஸ்த்து வழங்க முன்வரவில்லை என இலங்கை ஜனநாயக முன்னணி வினவுகின்றது எனவும் ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இவ்வாறு குறிப்பிட்டார்.

2026ம் ஆண்டு அரசாங்கம் அமுல்படுத்தவிருக்கும் கல்விக் கொள்கையின் சீர்திருத்தம் சம்பந்தமாக கல்வி அமைச்சரின் தலைமையில் அமைச்சின் கேட்போர் கூட்டத்தில் அமைச்சின் கீழ் அமையப்பெற்றுள்ள தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள், கல்வி அமைச்சின் செயலாளர், தேசிய கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர், ஏனைய உயர் அதிகாரிகளைக் கொண்ட குழு 2025ம் ஆண்டு ஆரம்பம் முதல் செப்டம்பர் மாதம் 10ம் திகதி வரையிலும் சீர்திருத்தம் சம்பந்தமாக அமர்வுகள் சிங்கள மொழியில் மாத்திரம் நடைபெற்றது.
சில தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் சிங்கள மொழியில் பரீட்சயம் இல்லாத காரணத்தினால் இக்கலந்துரையாடலின் சிறு விளக்கத்தையாவது ஏக நேரத்தில் தமிழில் மொழிபெயர்க்குமாறு வேண்டினார்கள்.

இதனை செவிமடுத்த அதிகாரிகள் இறுதியில் தமிழ் மொழியில் மொழி பெயர்ப்புச் செய்வதாகக் கூறி கலந்துரையாடலைத் தொடர்ந்தார்கள். இறுதியில் தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பு நடைபெறவில்லை. இவ்வாறுதான் ஒவ்வொரு அமர்வுகளிலும் சிங்கள மொழியில் அமர்வுகள் நடைபெற்றது. சில தொழிற்சங்க பிரதிநிதிகள் எழுந்து நின்று ஆங்கிலத்திலாவது மொழிபெயர்ப்பு செய்யுங்கள் என வேண்டியும் எதுவும் நடைபெறவில்லை.

தமிழ்மொழிக்கு சம அந்தஸ்த்து வழங்குவதாக சுற்றுநிருபத்தில் கூறப்பட்டிருந்தும் கூட செயற்பாட்டில் தமிழ் மொழிக்கு எதுவிதமான அந்தஸ்த்தும் வழங்கப்படாமல் இருப்பதை இலங்கை ஜனநாயக முன்னணி வன்மையாக கண்டிக்கின்றது.

மேற்கூறப்பட்ட விடயங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் இருக்க இவ்வரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் முன்னணியின் தலைவர் அல்ஹாஜ் யு.டீ. கமால்தீன் வேண்டிக் கொள்வதுடன் சிங்கள மொழிக்கு நிகராக தமிழ் மொழிக்கும் அந்தஸ்த்து வழங்கி தமிழ் மொழியை தாய் மொழியாகக் கொண்ட மக்களின் கனவுகளை நினைவுக்கு கொண்டு வருமாறு வேண்டுகின்றேன்.

No comments