Column Left

Vettri

Breaking News

நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் பதவி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி வசமானது




 பாறுக் ஷிஹான்


நிந்தவூர்  பிரதேச சபையின் புதிய தவிசாளராக  இரகசிய  வாக்குமூலத்தின் அடிப்படையில்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை  சேர்ந்த உறுப்பினர்  ஆதம்பாவா அஸ்பரும்    உப தவிசாளராக ஐக்கிய மக்கள் சக்தி  கட்சியின் உறுப்பினர் சட்டத்தரணி எம்.எல்.இர்பானும் தெரிவாகினர்

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளர் மற்றும் உப தவிசாளர்  பதவிக்கு  தெரிவு செய்வதற்கான கூட்டம் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரும்   தலைமை தாங்கும் அதிகாரியுமாகிய ஆதம்லெப்பை முகம்மது அஸ்மி   தலைமையில்  சபை மண்டபத்தில் இன்று(2)   நடைபெற்றது.

புதிய தவிசாளரை தெரிவு செய்வதற்கான   பல்வேறு கட்சிகளையும் சேர்ந்த 13 உறுப்பினர்கள் கூட்ட மண்டபத்தில் சமூகமளித்திருந்தனர்.அம்பாறை மாவட்டம்  நிந்தவூர் பிரதேச சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சார்பில் 06 உறுப்பினர்களும்   ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி  சார்பில் 04   தேசிய மக்கள் கட்சி சார்பில் 02 ஐக்கிய மக்கள் சக்தி கட்சி சார்பாக  01  என  13 பேர் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். இதன்போது   உள்ளுராட்சி ஆணையாளர்   புதிய தவிசாளருக்கான முன்மொழிவுகளை கோரினார்.

இந்நிலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  கட்சியை சேர்ந்த  இருவர்  புதிய தவிசாளர் தெரிவிற்காக சபையில் உறுப்பினர்களினால் பிரேரிக்கப்பட்டனர்.இதனை அடுத்து பகிரங்க வாக்கெடுப்பா அல்லது இரகசிய வாக்கெடுப்பா என சபையில் விடப்பட்டது. இதன் போது சிறு இழுபறிக்கு பின்னர்  பெரும்பாலான உறுப்பினர்கள் இரகசிய  வாக்கெடுப்பினை கோரினர்.இதற்கமைய உறுப்பினர்களால் பிரேரிக்கப்பட்டு வழிமொழியப்பட்ட இரண்டு  புதிய தவிசாளர் தெரிவு உறுப்பினர்களும் இரகசிய  வாக்குமூலத்தின் அடிப்படையில் ஏனைய உறுப்பினர்களால் புதிய தவிசாளராக தெரிவு செய்ய கோரப்பட்டது.

இதன்போது நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி  சார்பில்   போட்டியிட்ட ஆதம்பாவா அஸ்பர் என்பவர்  6 ஆசனங்களை பெற்று  நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக தெரிவானார்.எதிராக போட்டியிட்ட அதே கட்சியை சேர்ந்த மற்றுமொரு தவிசாளர் வேட்பாளரான   சட்டத்தரணி ஆதம்லெப்பை றியாஸ் ஆதம்   என்பவர்   05 ஆசனங்களை பெற்ற நிலையில் 01 மேலதிக வாக்குகளால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை  சேர்ந்த உறுப்பினர்  ஆதம்பாவா அஸ்பர்   புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக உள்ளுராட்சி ஆணையாளர் உத்தியோக பூர்வமாக அறிவித்தார்.

அத்துடன்  நடைபெற்ற தவிசாளர் இரகசிய   வாக்கெடுப்பின் போது தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள்  இருவர்  நடுநிலை வகித்ததுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  கட்சி  சார்பில் முன்மொழியப்பட்ட உறுப்பினர்  ஆதம்பாவா அஸ்பர்  என்பருக்கு 06 வாக்குகளும்   ஏனைய தரப்பினரால்  புதிய  தவிசாளர் வேட்பாளராக முன்மொழியப்பட்ட   அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்   சட்டத்தரணி ஆதம்லெப்பை றியாஸ் ஆதம்  என்பருக்கு 05   வாக்குகளும் கிடைக்கப்பெற்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

மேலும் கூட்டத்தின் தொடர்ச்சியாக உப தவிசாளர் தெரிவு நடைபெற்றது. உப தவிசாளராக ஐக்கிய மக்கள் சக்தி  கட்சியின் உறுப்பினர் சட்டத்தரணி முகம்மது இப்ராலெப்பை இர்பான்   தெரிவு செய்யப்பட்டார்.ஏனைய தரப்பில் இருந்து போட்டிக்கு யாரும் முன்வராதமையால் சபையில் ஏகமனதாக  உப தவிசாளராக சட்டத்தரணி முகம்மது இப்ராலெப்பை இர்பான்  தெரிவானார்.

இந்த நிகழ்வில்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களான றிசாட் பதியுதீன் , அஷ்ரப் தாஹிர் ,  சம்மாந்துறை பிரதேச சபை  தவிசாளர்   ஐ.எல்.எம். மாஹிர் என பலரும்  கலந்து கொண்டனர்.புதிய தவிசாளர் தெரிவினை முன்னிட்டு நிந்தவூர்  பிரதேச சபையை சுற்றி  பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதனை அவதானிக்க முடிந்தது.







No comments