திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைக் கூடம் திறந்து வைப்பு!!
பாறுக் ஷிஹான்
திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் சேவைகளை மேம்படுத்தி அப்பிரதேச மக்களுக்கு சிறந்த சுகாதார சேவையினை வழங்கும் பொருட்டு அவ்வைத்தியசாலையில் புதிதாக சத்திர சிகிச்சைக்கூடமொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சத்திர சிகிச்சைக் கூடத்தினை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (14) திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ஏ.பி.மசூத் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சத்திர சிகிச்சைக் கூடத்தினை திறந்து வைத்தார்.
இதன்போது பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.சீ.எம்.மாஹிர், வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் செயலாளர் சட்டத்தரணி கே.ஜெகசுதன் உட்பட வைத்தியசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வின் போது பிராந்திய பணிப்பாளர் உரையாற்றுகையில்,
இந்த சத்திர சிகிச்சைக்கூடமானது சுகாதார அமைச்சினதும் பொதுமக்களினதும் நிதியுதவியின் ஊடாக ஒழுங்கமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. சத்திர சிகிச்சைக் கூடமானது ஆதார வைத்தியசாலையின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாகக் காணப்படுகிறது. சுகாதார சேவையில் அதன் பங்களிப்பு மிக முக்கியமானதாக உள்ளது.
இந்த சத்திர சிகிச்சைக் கூடத்துக்கு தேவையான பெறுமதிமிக்க உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக அண்மையில் இடம்பெற்ற தாதிய உத்தியோகத்தர் நியமனத்தின் போதும் அதிகமானவர்களை இங்கு நியமதித்துள்ளோம். அதிலும் விசேடமாக சத்திர சிகிச்சை கூடங்களில் வேலை செய்தவர்கள், விசேட பயிற்சி பெற்றவர்கள் என அனுபவமிக்க மிகவும் திறமையானவர்கள் உள்ளனர். அந்தவகையில் சத்திர சிகிச்சைக்கூடத்தின் சேவைகளை ஆரம்பிப்பதற்கு போதுமான வளங்கள் உள்ளன.
சுகாதார உதவியாளர் பற்றாக்குறை தொடர்பில் இங்கு பேசப்பட்டது. சுகாதார உதவியாளர்கள் 5 பேரை விரைவில் இவ்வைத்தியசாலைக்கு நியமிப்பதற்கு திட்டமிட்டுள்ளேன். அத்துடன் ஓரிரு மாதங்களில் அரசாங்கம் புதிதாக வைத்தியர்களுக்கு நியமனம் வழங்கவுள்ளது. அதிலும் திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கே கூடுதலானவர்களை நியமிப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளேன்.
அத்துடன் குருதி சுத்திகரிப்பு பிரிவொன்றினையும் இங்கு திறப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே தற்போதுள்ள வளங்களைக் கொண்டு இந்த பிரதேச மக்களுக்கு முடியுமானளவு சேவையாற்றுவதற்கு சகலரும் முன்வர வேண்டும் என்றார்.
No comments