Column Left

Vettri

Breaking News

கிழக்கின் மூத்த நிர்வாக சேவை அதிகாரி கோபாலரெத்தினம் 40 வருடகால அரச சேவையிலிருந்து ஓய்வு பெறுகிறார்!!




(  வி.ரி.சகாதேவராஜா)

கிழக்கு மாகாணத்தின் மூத்த நிர்வாக சேவை அதிகாரியும் இலங்கை நிருவாக சேவை விசேட தர அதிகாரியுமான மூ.கோபாலரத்தினம்(மூகோ)  தனது 40 வருடகால அரச சேவையிலிருந்து இன்று(30) புதன்கிழமை அறுபதாவது வயதில்  ஓய்வு பெறுகிறார்.

மட்டக்களப்பு செட்டிபாளையத்தினை பிறப்பிடமாக கொண்ட இவர், மூத்ததம்பி செல்லம்மா தம்பதியினரின் புதல்வராவார். 30.07.1965 இல் பிறந்தவர் .தற்போது கல்முனையில்  வாழ்ந்துவருகிறார்.

1995 ஆம் ஆண்டு இலங்கை நிருவாக சேவை அதிகாரியாக  தெரிவுசெய்யப்பட்ட இவர்,  செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வி தொடக்கம் உயர் தரம் வரை கற்று பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் இந்தியா காமராஜர் பல்கலைக்கழகத்தில் கல்வி முதுமானிப் பட்டம் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் முது தத்துவமானி பட்டம் என்பவற்றை நிறைவு செய்ததுடன்  அதே தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்ட கற்கை நெறியைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார். 


இளைஞர் சேவை அதிகாரியாக அரச சேவையில் இணைந்து ஆசிரியராக தொழில் அதிகாரியாக  இலங்கை நிர்வாக சேவை விசேட தர நிர்வாகியாக பதவி உயர்வு பெற்று 11 பிரதேச செயலகங்ளில் 24 வருடம் வினைத்திறனான சேவையாற்றி நிதி அமைச்சரின் மேலதிகப் பணிப்பாளர் நாயகமாகவும் கிழக்கு மாகாண சபை பொதுசேவை ஆணைக் குழு மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சு  போன்றவற்றின்  செயலாளராகவும் பிரதிப் பிரதம செயலாளராகவும் சிறந்த பணியாற்றியவர் .

2003இல் இந்தியாவில் நுண்கடன் திட்ட ஆய்வு பற்றிய செயல் அமர்விலும் 2019 இல்  இந்தியாவில் நடைபெற்ற உலக தமிழ் இணைய மகாநாட்டிலும் கலந்து கொண்டு தனது அறிவினைப் பட்டை தீட்டியவர் மேலும் அவுஸ்ரேலியா மோனாஸ் பல்கலைக்கழகத்தில் இயல் அளவு கற்கை நெறி இந்தோனேசியா ஜஹர்த்தா பல்கலைக்கழகத்தில் தந்திரோபாய  முகாமைத்துவ கற்கை நெறி  சிங்கப்பூர் உயர் கல்விப் பீடத்தில் பயிற்றுவிப்பாளருக்கான கற்கை நெறி போன்றவற்றினையும் கற்றுத் தேர்ச்சி பெற்றவர்.

பல் துறையில் புலமைமிக்க இவர் பாட்டு ,நாடகம் ,கூத்து, நடனம் போன்றவற்றிலும் விற்பன்னர். வேலைக்காரன், பள்ளிக்கூடம் போன்ற குறுநாடகங்களிலும் நடித்தவர் .லயன்ஸ் கழகங்களுக்கு இடையிலான தேசிய மட்ட மெய்வல்லுனர் போட்டியில் வெற்றி பெற்று முன்மாதிரியான நிர்வாகியாகத் திகழ்ந்தவர் . 

பிரதேச செயலாளராக கடமை ஆற்றிய காலங்களில் திருக்கோயில் பிரதேசத்தில் "விளைநிலம்" நாவிதன்வெளி பிரதேசத்தில் "பசுமை" களுவாஞ்சிகுடி பிரதேசத்தில்  "குருத்தோலை" போன்ற நூல்களையும் வெளியிட்டவர்.
நாவிதன்வெளி பிரதேச செயலாளராக இவர் பணியாற்றிய பொழுது அவரது சேவையை பாராட்டி அக் கிராமத்து மக்கள் அங்குள்ள சிறு குடியேற்ற கிராமத்திற்கு "கோபாலபுரம்" எனும் அவரது பெயரை ஞாபகப்படுத்தி மணிமகுடம் சூட்டினாப்போல் அவரை கௌரவப் படுந்தினார்கள்.
இன்றும் அந்த கிராமம் அவரது பெயரால் வாழ்கிறது.

கல்முனை லயன்ஸ்கழக தலைவராகவிருந்த லயன் கோபாலரெத்தினம், பல சமுகசேவைகளில் முன்னின்று சேiவாயற்றிவருபவராவார். சிறந்த ஒருகலைஞரான இவர் பிரபல மேடைகளில் பழையபாடல்களைப்பாடி அசத்தியிருக்கிறார். நல்ல பாடகர். கிழக்கில் அரச சேவை பாடகர் பரிசுகளை பெற்றுள்ளார்.

No comments