Column Left

Vettri

Breaking News

இன்னும் 12 தினங்களில் கதிர்காம காட்டு வழிப்பாதை திறப்பு! அப்பாதையின் இன்றைய நிலை : எங்கும் வெள்ளக்காடு!!




 



( வி.ரி.சகாதேவராஜா)

வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் முருகன் ஆலய வருடாந்த ஆடிவேல் விழா உற்சவத்திற்காக காட்டு வழிப்பாதை இன்னும் 12 தினங்களில் அதாவது எதிர்வரும் 20 ஆம் தேதி திறக்கப்படும்.

அப் பாதையில் பயணிக்க விருக்கும் பாதயாத்திரைகளுக்கான  விழிப்புணர்வு தகவல் இது.

வருடாந்தம் சுமார் 40 ஆயிரம் அடியார்கள் இப் பாதையில் பயணிப்பதுண்டு.

எதிர்வரும் 20 ஆம் தேதி காலை 5.30 மணியளவில் உகந்தமலை குமண சரணாலய நுழைவாயிலில் காட்டுப் பாதை திறக்கப்படும்.

காட்டுப் பாதை திறப்பதற்கு இன்னும் 12 தினங்கள் இருக்கையில் அப் பாதையெங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
தொண்டு நிறுவனங்கள் 
அப் பாதையின் இன்றைய நிலை பற்றி அறிவித்துள்ளது.

 கதிர்காமப் பாதயாத்திரீகர்கள் தங்கும் முதலாவது இடைத்தங்கல் பிரதேசமான வாகூர வெட்டை (வண்ணாத்தி வெட்டை) பகுதியில், கடந்த நாட்களில் பெய்த மழை காரணமாக, பெரும்பாலான இடங்களில் வெள்ளம் தேங்கி நிற்கின்றன.

 வழக்கமாக முதலில் வாகுரவெட்டையில் கடக்கும் வெட்டையை கடந்தபின் பாதயாத்திரீகர்கள் சிரமமின்றி தங்கள் இடைத்தங்கல்  பிரதேசங்களை அடைவர். ஆனால் இம்முறை, அப்பகுதி முழுவதும் தண்ணீர் நிறைந்து, நடந்து செல்லவே முடியாத அளவுக்கு காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .

 இந்த நிலையில், இம்முறை பாதயாத்திரீகர்கள் வன இலாகா வாகனங்கள் செல்லும் பாதையினூடாகவே செல்லும் நிலை ஏற்பட்டிருக்கின்றது. அதுமட்டுமல்லாது பாதயாத்திரீகர்கள் இரவில் தங்குவதற்கான இடவசதி பற்றியும் சிந்திக்க வேண்டியுள்ளது. இரவில் உறங்கும் இடமெல்லாம் வெள்ளம் தேங்கி நிற்கிறது.

மேலும் குமுக்கன் ஆற்றின் ஓட்டமும் கடந்த வாரங்களில் கணிசமாக அதிகரித்து காணப்படுகின்றது.
 ஆனால் தற்போது முகத்துவாரம் ஊடாக நீர் வழிந்து ஓடுவதாகவும் சில நாட்களில் நீர் ஓட்டமும் குறையக்கூடிய வாய்ப்பும் இருப்பதாக அறியக்கூடியதாக  உள்ளது.

இதேவேளையில் வனவிலங்குகளின்  நடமாட்டமும் அதிகரித்துள்ளது. முக்கியமாக சிறுத்தைகளின் பெருக்கமும் நடமாட்டமும் அதிகமாக காணப்படுகின்றமை முக்கியமாக கவனிக்கக்கூடிய ஒன்றாகக் காணப்படுகின்றது.
 ஆனால் இவை மனித நடமாட்டத்திற்கு இசைவாக்கம் அடைந்துள்ளதாகவும் வன விலங்கு அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

எவ்வாறாயினும் எமது உயிரையும் எமது குடும்பத்தினரின் உயிரையும் பாதுகாக்க வேண்டியது எம்முடைய கடமையாகும். குறிப்பாக, இரவு நேரங்களில் மற்றும் அதிகாலை வேளைகளில் காட்டுவழிகளில் நடமாடுவதைக் கூடுதல் கவனத்துடன்
கையாளவேண்டுமென்று தொண்டர் அமைப்புகள் கேட்டுள்ளன.

இவ்வாறான சூழ்நிலைகளில், பாதயாத்திரையில் கலந்து கொள்பவர்கள் விழிப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும்.

No comments

Subscribe Us