Column Left

Vettri

Breaking News

ஆனைகட்டியவெளி காக்காச்சி வட்டையில் நடமாடும் கல்விச் சேவை!!




செ.துஜியந்தன்

பட்டிருப்பு வலயக்கல்வி பணிமனைக்குட்பட்ட  அதிகஷ்டப் பிரதேச பாடசாலைகளான  ஆனைகட்டியவெளி நாமகள் வித்தியாலயம்,  காக்காச்சி வட்டை விஷ்ணு மகா வித்தியாலயம் ஆகியவற்றில்  பட்டிருப்பு வலயக்கல்வி பணிமனையின் ஏற்பாட்டில் நடமாடும் விஞ்ஞான, கணனி ஆய்வு கூட கல்விச் சேவை  முதன் முதலாக வலயக் கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறிதரன் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிமனையில் கடந்த 15 வருடங்களாக இனி பாவனைக்கு பயன்படுத்த முடியாது என கைவிடப்பட்டிருந்த நடமாடும் விஞ்ஞான கணனி ஆய்வு கூட வாகனம் வலயக்கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறிதரன் முயற்சியினால் மீள் இயங்கு நிலைக்கு கொண்டு வரப்பட்டு மாணவர்களின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைக்காக சேவைக்கு விடப்பட்டுள்ளது.

  போரதீவுப்பற்று  கல்விக் கோட்டத்திலுள்ள காக்காச்சி வட்டை விஷ்ணு மகா வித்தியாலயம் மற்றும் ஆனை கட்டிய வெளி  நாமகள் வித்தியாலயம் ஆகியவற்றிலுள்ள மாணவர்களுக்கு இவ் நடமாடும் கல்விச் சேவை அறிமுகப்படுத்தப்பட்டு செயன் முறை மூலம் விஞ்ஞான,  கணனி பயிற்சிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது 

இந்நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள்,  உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக்கல்விப் பணிப்பாளர்கள்,  ஆசிரிய ஆலோசகர்கள் , அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து  கொண்டனர்.

15 வருடங்களுக்குப் பின் நடைபெறும் இவ் நடமாடும் கல்விச் சேவையினை பெற்றோர்கள், கல்வியாளர்கள்  பாராட்டிவருகின்றமை குறிப்பிடத்தக்கது 


No comments